தேடுதல்

Vatican News
முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய்   (AFP or licensors)

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் காலமானார்

நீண்டகாலமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த வாஜ்பாய் அவர்கள், ஆகஸ்ட் 16, இவ்வியாழன் மாலை காலமானார

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கிறோம்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதியன்று பிறந்த வாஜ்பாய் அவர்கள், அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். 1996 ஆம் ஆண்டு மிகக் குறுகிய காலம் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். பின்னர் மார்ச் 19ம் தேதி 1998ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக 2009ம் ஆண்டில் பொது வாழ்க்கையிலிருந்து வாஜ்பாய் விலகினார். இந்நிலையில் வயது மூப்பினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்ட வாஜ்பாய் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 11ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நீரிழிவு நோயினால் அவருக்கு ஒரு சிறுநீரகம் மட்டும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று இந்திய நேரம் மாலை 5.05மணியளவில் வாஜ்பாய் அவர்களின் உயிர் பிரிந்தது.

வாஜ்பாய் அவர்கள், இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தனி தகுதியுடன் பட்டம் பெற்றவர். மக்களவை எம்.பியாக பத்து முறையும், ராஜ்யசபாவிற்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது வாஜ்பாய் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

16 August 2018, 15:40