குழந்தைக்குப் பாலூட்டும் தாய் குழந்தைக்குப் பாலூட்டும் தாய் 

ஜூலை 1 முதல் 7 முடிய, தாய்ப்பால் வழங்கும் உலக வாரம்

குழந்தை பிறந்து இரண்டு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் வழங்கப்படாத குழந்தைகளில் 33 விழுக்காட்டினர், இறக்கும் ஆபத்து உள்ளது என்று UNICEF அறிக்கை கூறுகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குழந்தை பிறந்ததும், அதற்கு உடனடியாக தாய்ப்பால் வழங்கப்படாவிடில், அதன் உயிருக்கும், உடல் நலத்திற்கும் ஆபத்து உருவாகிறது என்று ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான UNICEFன் இயக்குனர், ஹென்றியெட்டா ஃபோரே அவர்கள் கூறியுள்ளார்.

ஜூலை 1 இப்புதன் முதல் 7, வருகிற செவ்வாய் முடிய, தாய்ப்பால் வழங்கும் உலக வாரம் கடைபிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஃபோரே அவர்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் தாய்ப்பால் அவர்களுக்குத் தரப்படவேண்டிய பல நோய்தடுப்பு மருந்துகளுக்குச் சமம் என்று கூறினார்.

UNICEF மற்றும் உலக நலவாழ்வு நிறுவனமான WHO இரண்டும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், உலகில் பிறக்கும் குழந்தைகளில், குறிப்பாக, வறுமைப்பட்ட நாடுகளில் பிறக்கும் குழந்தைகளில், 7 கோடியே 80 இலட்சம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்க பகுதிகளில், 65 விழுக்காடு குழந்தைகளுக்கு, பிறந்ததும், தாய்ப்பால் கிடைப்பதாகவும், கிழக்கு ஆசியா, மற்றும் பசிபிக் பகுதிகளில் இந்த விழுக்காடு, 32 என்ற அளவில், மிகக் குறைந்து காணப்படுவதாகவும் இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

76 நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இவ்வறிக்கையில், குழந்தை பிறந்து இரண்டு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் வழங்கப்படாதபோது, குழந்தைகளில் 33 விழுக்காட்டினர் இறக்கும் ஆபத்து உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. (UNICEF)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2018, 15:56