தேடுதல்

ஆப்ரிக்க ubuntu கலாச்சாரம் ஆப்ரிக்க ubuntu கலாச்சாரம் 

வாரம் ஓர் அலசல் – வீணாக்குவதைக் குறை, சேமிப்பை அதிகரி

பகிர்ந்து வாழும் பழக்கம் உள்ளவர்கள், என்னைச் சுற்றி இருப்பதால், நானும் அவர்களைப் போல வளமாக இருக்கின்றேன். நான் என்னிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ்ந்தால், நான் வாழ்கின்ற சமுதாயமும் வளமாக இருக்கும்

மேரி தெரேசா - வத்திக்கான்

Ubuntu கலாச்சாரம்

மனிதயியல் வல்லுனர் ஒருவர், ஆப்ரிக்க பழங்குடி மக்களின் Ubuntu கலாச்சாரம், அம்மக்களின் பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் போன்றவற்றை அறிந்துகொள்வதற்காக அம்மக்கள் மத்தியில் சில காலம் தங்கியிருந்தார். அச்சமயத்தில், அச்சிறார் தன்னுடன் பெரும்பாலான நேரங்களில் இருப்பதைக் கண்டார். அதனால் ஒருநாள் அச்சிறாருக்கு ஒரு விளையாட்டு வைக்க நினைத்தார். அந்த இடத்திற்கு அருகிலிருந்த நகரத்திற்குச் சென்று நிறைய மிட்டாய்கள் வாங்கி வந்து அவற்றை, அலங்கரிக்கப்பட்ட ஒரு கூடையில் நிரப்பி, அக்கூடையை ஒரு மரத்தின் அடியில் வைத்தார். பின்னர் சிறாரிடம், உங்களுக்கு ஒரு விளையாட்டு வைக்கப் போகிறேன் என்று சொல்லி, அவர்களை அந்த மரத்திற்குச் சற்று தூரத்தில் வரிசையாக நிற்க வைத்தார். நான் விசில் ஊதியவுடன் நீங்கள் ஓடி, அந்தக் கூடையைத் தொட வேண்டும். உங்களில் யார் முதலில் ஓடி, அந்தக் கூடையைத் தொடுகின்றீர்களோ, அவருக்கு அந்த மிட்டாய்கள் அனைத்தும் கொடுக்கப்படும் என்று சொன்னார் அவர். விளையாட்டு ஆரம்பமானது. அவர் விசில் கொடுத்தவுடன், வரிசையாக நின்றுகொண்டிருந்த எல்லாச் சிறாரும் ஒருவர் மற்றவரின் கைகளைப் பிடித்துக்கொண்டு, ஒன்றாக மரத்தை நோக்கி ஓடினர். ஒரே நேரத்தில் எல்லாச் சிறாரும் அம்மரத்தை அடைந்தனர். பின்னர் அச்சிறார் அந்த மரத்தடியில் அமர்ந்து மிக மகிழ்வுடன் அந்த மிட்டாய்களை மெதுவாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த மனிதயியல் வல்லுனர் அச்சிறாரிடம் சென்று, நீங்கள் எதற்காகக் கைகளைக் கோர்த்துக்கொண்டு ஓடினீர்கள், அப்படி ஓடியிருக்காவிட்டால், உங்களில் ஒருவருக்கு அந்தக் கூடையிலிருந்த எல்லா மிட்டாய்களும் கிடைத்திருக்குமே எனக் கேட்டார். அதற்கு அச்சிறார், “எங்களில் மற்றவர் துயரப்படும்போது, ஒருவர் மட்டும் எப்படி மகிழ்வாக இருக்க இயலும்?  இதுதான் Ubuntu” என்று சொன்னார்கள். அந்த மனிதயியல் வல்லுனர் தனது இந்த அனுபவத்தை இவ்வாறு எழுதியுள்ளார்... உலகில் ஏனையோரோடு உள்ள உறவில், மனிதர் பற்றி புரிந்துகொள்வதற்கு, இந்த ஆப்ரிக்க பாரம்பரிய Ubuntu தத்துவம் உதவுகின்றது. ஆப்ரிக்காவின் தென் பகுதியில் வாழ்கின்ற Ubuntu கலாச்சார மக்கள் பற்றி, தென்னாப்ரிக்க ஆங்லிக்கன் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு அவர்கள், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.... Ubuntu கலாச்சார மக்கள், திறந்தமனதுடன், பிறரின் தேவைகளுக்கு எப்போதும் உதவத் தயாராக இருக்கின்றவர்கள். மற்றவர்கள், திறமையானவர்கள், நல்லவர்கள் என்ற அச்சுறுத்தல் ஏதுமின்றி வாழ்பவர்கள். பிறர் அவமானப்படுத்தப்படும்போது, சித்ரவதைக்கு உள்ளாகும்போது, நசுக்கப்படும்போது, தாங்களும் அந்நிலைக்கு உள்ளாவதாக இம்மக்கள் உணர்வார்கள். தனக்காகவே வாழும் ஒருவர், மனிதரே அல்ல என்பது இம்மக்களின் நம்பிக்கை.

Ubuntu மக்கள் உணர்த்துவது போன்று, நம்மைச் சுற்றி இருப்பவர்கள், பிறர் வாழ வேண்டுமென நினைத்துச் சிலர் செயல்படுவதால், பலரின், குறிப்பாக, ஏழையரின் வாழ்வு மலர்கின்றது.

45 ஏழை மாணவிகளுக்கு கல்வி கட்டணம்

இந்தியாவில், அரசு ஊழியர் ஒருவர், தன் மகள் இறந்த சோகத்திலும், 45 ஏழை மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி அவர்கள் படிப்பைத் தொடர உதவியுள்ளார். கர்நாடக மாநிலம், கல்புர்கி மாவட்டம், மக்தம்புரா நகரைச் சேர்ந்தவர் பசவராஜ். இவர் அங்குள்ள ஓர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மகள் தனேஷ்வரி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் திடீரென்று இறந்துவிட்டார். இதனால், மிகுந்த சோகத்துடன் இருந்த பசவராஜ் அவர்கள், தன் மகளின் நினைவாக ஏதேனும் நல்ல காரியங்கள் செய்ய நினைத்திருந்தார். தன் மகளுக்குத்தான் எந்தவிதமான கல்வியையும் கொடுக்க முடியாமல் போனது, ஆனால், தன் மகளின் வயதில் இருக்கும் சிறுமிகளுக்கு கல்வியைக் கொடுக்கலாம். ஏழை மாணவிகளின் கல்விக்கட்டணத்தை செலுத்தி அவர்களைக் கல்வி கற்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார் பசவராஜ். இதையடுத்து, இந்த ஆண்டு முதல், ஏழை மாணவிகளைத் தேடிப்பிடித்து கல்விக்கட்டணத்தை செலுத்தி அவர்களைத் தொடர்ந்து படிக்க உதவி செய்து வருகிறார். இதுவரை மொத்தம் 45 மாணவிகளின் கல்விக் கட்டணத்தை செலுத்தி அவர்களின் படிப்பை தொடர பசவராஜ் அவர்கள் உதவியுள்ளார். பசவராஜ் அவர்களிடம் இருந்து உதவி பெற்ற பள்ளி மாணவி பாத்திமா கூறுகையில், நாங்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் எங்களைத் தொடர்பு கொண்ட பசவராஜ் சார், எங்களுக்கு கல்விக்கட்டணத்தைச் செலுத்தி படிப்பைத் தொடர உதவியுள்ளார். (தினமலர்)

குவாரியிலிருந்து மீட்கப்பட்டவர்

உள்ளாவூர் என்ற கிராமம், செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் 16 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அவ்வூரையொட்டிய சுடுகாட்டுக்கு அருகிலுள்ள இருபது  குடிசை வீடுகளில் ஒன்றில் வாழ்ந்து வருபவர் பச்சையம்மாள். தனது ஒன்பதாவது வயதிலிருந்து பல வருடங்கள் குவாரியில் கொத்தடிமையாக வாழ்ந்தவர் இவர். இந்த ஏழைப் பெண்ணின் அப்பா வாங்கியிருந்த கடனுக்காக, இவரின் அண்ணன், செய்யாறில் இருக்கின்ற குவாரியில் வேலைக்குப் போனார். ஓர் ஆளாக வேலை பார்த்தால், கடனைச் சீக்கிரம் அடைக்க முடியாது என்று, இவரும் இவரின் அம்மாவும் அங்குச் சென்றனர். பள்ளிக்கூடம் போகும் வயதில், குவாரியில் கல் உடைத்துப் போடுதல், பாறைக்குள் வெடிமருந்து வைப்பது, கழனியில் அறுவடை செய்வது போன்ற எல்லா வேலைகளையும், இவரைச் செய்ய வைத்துள்ளார்கள். இந்தக் குவாரி பற்றிச் சொல்லும் பச்சையம்மாள் அவர்கள்... அந்த குவாரி ஒரு பெரிய குழியாட்டம் இருக்கும். சின்ன வயசுலேயே அதுக்குள்ள போயிட்ட எனக்கு, எந்த வருஷத்துல இருக்கோம், என்ன வயசு ஆகுது, வெளியில என்ன நடக்குதுன்னு எதுவுமே தெரியாம போயிடுச்சு. அப்பா எவ்வளவுதான் கடன் வாங்கியிருந்துச்சு, இப்போ எவ்வளவு ரூவா கழிஞ்சிருக்குன்னுகூடத் தெரியாது. மொதலாளிக்கிட்ட கேட்டா என்னையும் அம்மாவையும் அடிப்பாங்க. அதனால கேக்க மாட்டோம். காலையில அஞ்சு மணிக்கு குவாரிக்குள்ள போயிடணும். இரவு 11 மணிவரை வேலை பாக்கணும். குவாரிக்குப் பக்கத்துலயே குடிசை போட்டுக்குடுத்து தங்க வெச்சிக்கிட்டாங்க. நெனைச்ச நேரம் தூங்க முடியாது, சாப்புட முடியாது, தண்ணிகூட குடிக்க முடியாது. ராத்திரி தூங்கலாம்னு குடிசைக்கு வந்தா பாறை வெடிச்சு குடிசை மேலயே கல்லுவந்து விழும். தினம் தினம் பதறிக்கிட்டேதான் இருப்போம். அப்பா விபத்துல இறந்தப்ப, அவர் முகத்தைக்கூட பார்க்க என்னை அனுமதிக்கல. குவாரியில் கொத்தடிமையாக வேலை செய்த ஒருவரைத் திருமணம் செய்துக்கிட்டேன். அவருக்கு நேர்ந்த கொடுமைகள், இன்னும் அதிர்ச்சியாக இருக்கும். “திடீர்னு ஒருநாள் குவாரிக்குள்ள 10, 20 ஜீப்புங்க வந்துச்சு. குவாரி ஆளுங்க, எங்க ஆட்களை அடிச்சு, ‘ஓடிப்போங்க, எங்கயாச்சும் போய் ஒளிஞ்சுக்கோங்க’ன்னு கத்துனாங்க. ஆனா, நாங்க அங்கேயே நின்னுட்டோம். அப்புறம் ஓர் அம்மா ஜீப்ல இருந்து இறங்கி வந்து, ‘பயப்படாதீங்க, நாங்க உங்க எல்லாரையும் பத்திரமா அவங்கவங்க ஊருக்கு அனுப்பி வைக்கத்தான் வந்துருக்கோம்’னு சொல்லி வேன்ல ஏறச் சொன்னாங்க.

பின்னர் ஐ.ஜே.எம் அறக்கட்டளை இவர்களுக்கு அரசிடம் விடுதலைப் பத்திரம் பெற்றுத் தந்து, அவரவரின் ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இப்போது பச்சையம்மாள், படிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார். இருளர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மனை பட்டா வாங்கிக் கொடுப்பது போன்ற தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறார். அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி, தங்கள் பகுதிக்குச் சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார் பச்சையம்மாள். இவரின் இந்த முயற்சிக்கு மும்பையிலுள்ள, மகராஷ்டிரா மாநில பெண்கள் அமைப்பு, மனித உரிமை விருது வழங்கியுள்ளதுடன், அவர் கணவருக்கு மின்சார ஆட்டோவும் வழங்கி சிறப்பித்திருக்கிறது. (விகடன்)

பிறரின் பசிகளைப் போக்க..

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறியுள்ளது போன்று, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனையோ நம் சகோதர, சகோதரிகள், வயிற்றுப்பசி மட்டுமல்லாமல், எல்லா வகையான பசிகளினாலும் அழுது கண்ணீர் சிந்துகின்றனர். இந்நிலையை வெறும் பார்வையாளர்களாக நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கு உதவ வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

பசியாய் இருப்பவர்கள் பற்றி திருததந்தை

எனவே, Ubuntu கலாச்சார மக்கள் போன்று, பிறர் நலனில் அக்கறை காட்டுவோம். கரைபுரண்டோடும் காவிரித் தாயின் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கின்றதே, அதனைச் சேமிப்பதற்குத் தகுந்த அணைகள் இல்லையே என்ற ஏக்கக் குரல்கள் கேட்கும்  இந்நாள்களில், எதையும் வீணாக்காமல், தேவையில் இருப்பவர்களுக்கு உதவுவோம். “மனிதராகப் பிறந்திருப்பதே ஒரு பேறு. எனவே, வாழும் காலத்திற்குள், சாதிக்கும் விதத்தில் நல்ல அறிகுறியை விட்டுச்செல்வோம்” (விவேகானந்தர்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2018, 15:48