மனித வர்த்தகத்திற்கு எதிராக மனித வர்த்தகத்திற்கு எதிராக 

உலகில் 28 விழுக்காடு சிறார் கடத்தப்படுகின்றனர்

மனிதர்கள் வணிகப் பொருள்களாக கடத்தப்படும் நிலைக்கு எதிரான உலக நாள், ஜூலை 30, இத்திங்களன்று, கடைபிடிக்கப்படுவதையொட்டி, UNICEF வெளியிட்டுள்ள அறிக்கை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் 

இன்றைய உலகில் வர்த்தக நோக்கத்துடன் கடத்தப்படும் மக்களுள், ஏறத்தாழ 28 விழுக்காட்டினர் சிறார்கள் என, ஐ.நா.வின் குழந்தைகள் நல நிதி அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.

மனிதர்கள் வணிகப் பொருள்களாக கடத்தப்படும் நிலைக்கு எதிரான உலக நாள், ஜூலை 30 இத்திங்களன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, UNICEF அமைப்பு, இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

உலக அளவில், கடத்தப்படும் சிறாரின் அளவு, 28 விழுக்காடாக இருப்பினும், சஹாராவையடுத்த ஆப்ரிக்கப் பகுதி, மத்திய அமெரிக்கா, மற்றும் கரீபியன் பகுதி ஆகிய இடங்களில், இந்த அளவு 62 முதல் 64 விழுக்காடாக உள்ளது என்று UNICEF அமைப்பின் செய்தி தெரிவிக்கிறது.

குடிபெயர்வோராக, புலம்பெயர்வோராக வாழும் சிறார்களே, இத்தகையக் கடத்தல்களுக்கு அதிக அளவில் உள்ளாகின்றனர் என்று கூறும் UNICEF அமைப்பின் அறிக்கை, இத்தகையக் கொடூரங்களுக்கு உள்ளாகும் சிறாரின் எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் மிக அதிகமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

வணிகப் பொருள்களாக கடத்தப்பட்ட சிறார்களுக்கு மறுவாழ்வை வழங்க, போதிய நிதி ஆதாரங்களும், சட்ட உதவிகளும் இல்லாமல் இருப்பதும், கடத்தல் கும்பல்களுக்கு உதவுவதாக உள்ளது என்று UNICEF அமைப்பின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2018, 16:45