நெல்சன் மண்டேலா நெல்சன் மண்டேலா 

மண்டேலா 100வது பிறந்தநாளுக்கு கூட்டேரஸ் செய்தி

தன் இறந்தகாலத்தில் சிறைப்பட்டிராமல், தென் ஆப்ரிக்காவின் எதிர்காலத்தை வடிவமைத்த சிற்பியாக திகழ்ந்த மண்டேலா அவர்கள், வரலாற்றில் தனியொரு இடம் வகிக்கிறார் - ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ்

லூயிஸ் ஜெரோம் – வத்திக்கான் செய்திகள்

மனிதர்களின் கனவுகளையும், செயல் முயற்சிகளையும் மிகச் சிறந்த முறையில் தூண்டியவர்களில், நெல்சன் மண்டேலா அவர்கள் தனியொரு இடம் வகிக்கிறார் என்று ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், ஜூலை 18 இப்புதனன்று செய்தியொன்றை வெளியிட்டார்.

1918ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி பிறந்த நெல்சன் மண்டேலா அவர்களின் 100ம் ஆண்டு பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், இப்புதனன்று வெளியிட்ட காணொளி செய்தியில், கூட்டேரஸ் அவர்கள், நீதிக்கும், சமத்துவத்திற்கும் போராடிய மிகச் சிறந்த மனிதராக வரலாற்றில் இடம் பிடித்திருப்பவர் மண்டேலா என்று கூறியுள்ளார்.

27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், தன் இறந்தகாலத்தில் சிறைப்பட்டிராமல், தென் ஆப்ரிக்காவின் எதிர்காலத்தை வடிவமைத்த சிற்பியாக மண்டேலா திகழ்ந்தார் என்று, கூட்டேரஸ் அவர்கள், தன் செய்தியில் புகழாரம் சூட்டினார்.

2013ம் ஆண்டு, தன் 95வது வயதில் நெல்சன் மண்டேலா அவர்கள் உயிர் துறந்ததையடுத்து, 2015ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 18ம் தேதியை, நெல்சன் மண்டேலா உலக நாள் என்று ஐ.நா. பொது அவை அறிவித்துள்ளது.

உலகெங்கும் சிறைக்கைதிகள் சித்ரவதைகளிலிருந்து காப்பாற்றப்படுவதற்குத் தேவையான விதிமுறைகள், கைதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மதிப்பு மற்றும் நலவாழ்வு பராமரிப்பு ஆகிய விதிமுறைகளை வகுத்துள்ள ஐ.நா.அவை, இந்த விதிமுறைகளுக்கு நெல்சன் மண்டேலா விதிமுறைகள் என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2018, 15:01