தொமினிக்கன் குடியரசில் வெள்ளத்தில் மோட்டார்பைக் தொமினிக்கன் குடியரசில் வெள்ளத்தில் மோட்டார்பைக்  

உப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி

திருப்பூரில், அரசு பள்ளி மாணவி யோகேஸ்வரி, உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவை பிரித்து, அதன் பயனாக, இரு சக்கர வாகனத்தை இயக்கி வெற்றி பெற்றுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று எரிசக்திகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளை, தொழில் நிறுவனங்களும், அரசு சார்ந்த துறைகளும் மேற்கொண்டு வருவது ஒருபுறம் இருக்கையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவியர் பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரிலுள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவரும் யோகேஸ்வரி, கடந்த வாரம் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டு, சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் ஹைட்ரஜன் வாயுவில் இரு சக்கர வாகனத்தை இயக்கி, மாநில அளவில் முதல் பரிசு பெற்றார்.

அண்மைய காலமாக சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்ந்து நிகழ்ந்து வருவதையும், தற்போதுள்ள சூழ்நிலையில் பெட்ரோல், டீசலுக்கு தினம் ஒரு விலை என்ற நிலைமை இருப்பதையும் பற்றி கவலை கொள்கிறார் யோகேஸ்வரி.

எனவே பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுபாடு ஏற்படும் அபாயகரமான சூழல் உள்ளதாகவும், உலகில் அதிக பரப்பளவில் விரிந்து கிடக்கும் கடல் நீரை பயன்படுத்தி அதிலுள்ள ஹைட்ரஜன் வாயுவை பிரித்தெடுத்து, அதனை கொண்டு வாகனங்களை இயக்கினால், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்து பாதுகாக்க முடியும் என்றும் கூறுகிறார், யோகேஸ்வரி.

தன்னுடைய திட்டத்தின் வழியே, சுமார் ஒரு லிட்டர் உப்புத் தண்ணீரை பயன்படுத்தி வாகனத்தை இயக்கும்போது, ஏறத்தாழ, 35 முதல் 40 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம் என்று யோகேஸ்வரி கூறுகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் யோகேஸ்வரியின் கண்டுபிடிப்பு முதலில் தேர்வானது(பிபிசி).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2018, 16:11