பாம்பலோனாவில் குண்டடிபட்டு கிடக்கும் இனிகோ பாம்பலோனாவில் குண்டடிபட்டு கிடக்கும் இனிகோ 

இமயமாகும் இளமை - நினைத்ததை நிறைவேற்றும் "நெருப்பானவர்"

"நெருப்பானவர்" (the fiery one) என்று பொருள்படும் ‘இக்னேசியஸ்’ என்ற இயற்பெயர் கொண்ட இப்புனிதர், நினைத்ததை நிறைவேற்றிய நெருப்பாக வாழ்ந்தவர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஸ்பெயின் நாட்டில், பாம்பலோனா கோட்டையைக் காப்பாற்ற, 28 வயதான இளம் வீரர் இனிகோ முழு மூச்சுடன் போராடினார். பிரெஞ்சு படையினரின் பீரங்கி குண்டு அவரது கால்களைச் சிதைத்தது. அவர் காட்டிய வீரத்தையும், விசுவாசத்தையும் கண்ட பிரெஞ்சு வீரர்கள், போர் கைதியான அவரை மரியாதையுடன் நடத்தினர். கால்களைச் சிதைத்த பீரங்கி குண்டு, அவரை மரணத்தின் வாயிலுக்கு அழைத்துச் சென்றது. இறக்கும் நிலையில் இருப்போருக்கு வழங்கப்பட்ட அருளடையாளத்தை பெற்ற இளையவர் இனிகோ, அற்புதமாகக் குணமடைந்தார்.

அவரது காலில் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையில், ஓர் எலும்பு சரியாகப் பொருத்தப்படவில்லை. மீண்டும் அரசவைக்குச் செல்லும்போது, இறுக்கமான கால் சட்டையும், இறுக்கமான காலணிகளும் அணியும் வேளையில், கால் எலும்பு கோணலாக இருப்பது வெளியே தெரியும் என்பதை இளையவர் இனிகோ உணர்ந்தார். எனவே, மீண்டும் ஓர் அறுவைச் சிகிச்சைக்குத் தன்னையே உட்படுத்திக்கொண்டார்.

மயக்க மருந்துகள் ஏதுமின்றி நடைபெற்ற அந்த அறுவைச் சிகிச்சையில், அவரது கால் எலும்பு மீண்டும் முறிக்கப்பட்டு, இணைக்கப்பட்டது. தன் வெளித்தோற்றத்தில், எவ்விதக் குறையும் இருக்கக்கூடாது என்பது மட்டுமே அவரது ஒரே எண்ணமாக இருந்ததால், தான் எண்ணியதை நிறைவேற்ற, எத்தனை வேதனைகளையும் சந்திக்க அவர் தயாராக இருந்தார். நினைத்ததை நிறைவேற்றும் தீர்க்கமானச் சிந்தனை, இளையவர் இனிகோவின் வாழ்வில், வேறு வழிகளில் உதவியாக இருந்தது. அரசவை வாழ்வையும், உலக வாழ்வையும் முற்றிலும் துறந்து, 'இறைவனின் அதிமிக மகிமைக்காக' உழைக்க அவர் எடுத்த தீர்மானம், ஒரு துறவு சபையை உருவாக்கியது.

பல்வேறு தடைகளையும், எதிர்ப்புக்களையும் தாண்டி, தன் 49வது வயதில், இயேசு சபையை நிறுவினார், இக்னேசியஸ். அச்சபையின் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றி, 1556ம் ஆண்டு, ஜூலை 31ம் தேதி, தன் 64வது வயதில் இறைவனடி சேர்ந்தார். "நெருப்பானவர்" (the fiery one) என்று பொருள்படும் ‘இக்னேசியஸ்’ என்ற இயற்பெயர் கொண்ட இப்புனிதர், நினைத்ததை நிறைவேற்றிய நெருப்பாக வாழ்ந்தவர். லொயோலாவின் புனித இக்னேசியஸ் திருநாள், ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2018, 14:55