விலையுயர்ந்த கார் விலையுயர்ந்த கார் 

இமயமாகும் இளமை: பகிர்வு பஞ்சத்தை வளர்க்கும் பாடங்கள்

அச்சிறுவன், "ம்... எனக்கும் உங்கள் அண்ணனைப் போல ஒரு மனம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். நானும் என் தம்பிக்கு இதுபோன்ற ஒரு காரை அன்பளிப்பாகத் தர முடியுமே!" என்று சொன்னான்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

உணவகத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விலையுயர்ந்த காரை, அவ்வழியே வந்த ஓர் ஏழைச் சிறுவன் வியப்புடன் பார்த்தபடியே நின்றான். காரின் உரிமையாளர் அங்கு வந்ததும், அவரிடம், "இந்தக் கார் உங்களுடையதா?" என்று கேட்டான் சிறுவன். அதற்கு அவர், "ஆம், என் அண்ணன் இதை எனக்குப் பரிசாகத் தந்தார்" என்று சொன்னார். அச்சிறுவன் உடனே, "நீங்கள் எதுவும் சிறப்பாகச் செய்ததால் அவர் உங்களுக்கு இதைக் கொடுத்தாரா?" என்று கேட்டதற்கு, கார் உரிமையாளர், "இல்லையே... அவருக்கு என் மேல் அதிக அன்பு உண்டு. எனவே, எனக்கு, கிறிஸ்மஸ் பரிசாக இதைத் தந்தார்" என்று பதில் சொன்னார். சிறுவன் ஒரு பெருமூச்சுடன், "ம்... எனக்கும்..." என்று எதையோ சொல்ல ஆரம்பித்தான். "ம்... எனக்கும் இப்படி ஓர் அண்ணன் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று சிறுவன் சொல்லப்போகிறான் என்று கார் உரிமையாளர் நினைத்தார். ஏனெனில், அந்தக் காரைப் பார்த்த அவரது நண்பர்கள் பலர், தங்களுக்கு இப்படி ஓர் அண்ணன் கிடைக்கவில்லையே என்று ஏக்கத்துடன் சொன்னதை, காரின் உரிமையாளர் கடந்த சில நாட்களாகக் கேட்டுவந்தார். எனவே, இச்சிறுவனின் ஏக்கமும் அதுபோலவே இருக்கும் என்று கற்பனை செய்துகொண்டார். ஆனால், அச்சிறுவனோ, "ம்... எனக்கும் உங்கள் அண்ணனைப் போல ஒரு மனம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். நானும் என் தம்பிக்கு இதுபோன்ற ஒரு காரை அன்பளிப்பாகத் தர முடியுமே!" என்று சொன்னான்.

"ம்... எனக்கும் இப்படி ஓர் அண்ணன் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று கார் உரிமையாளரைப் போல் எண்ணுவது, நாம் என்னென்ன பெறமுடியும் என்று கணக்கிடும் மனம். "ம்... எனக்கும் உங்கள் அண்ணனைப் போல ஒரு மனம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று ஏழைச் சிறுவனைப்போல் எண்ணுவது, நாம் என்னென்ன தரமுடியும் என்று சிந்திக்கும் மனம்.

பகிர்வதும், தருவதும், பொதுவாக, குழந்தைகளுக்கு எளிதில் தோன்றும் எண்ணங்கள். ஆனால், அவர்கள் வளர, வளர, மாற்றுப்பாடங்கள் அவர்கள் மனங்களில் திணிக்கப்படுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2018, 14:40