பார்வையற்றவர் தொட்டு உணர்தல் பார்வையற்றவர் தொட்டு உணர்தல் 

இமயமாகும் இளமை : பார்வையற்ற மாணவனின் நம்பிக்கை கனவு

ஒருவேளை என்னால், பார்வையற்ற முதல் குடியரசுத்தலைவர் பதவியைப் பெற முடியாவிட்டால் கண்டிப்பாக உங்களது வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன்’, ஸ்ரீகாந்த்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒரு நாள், இந்திய குடியரசுத்தலைவர் மாளிகைக்கு, ஆந்திர மாநிலத்தின் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், ஒரு குழுவாக, குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் உரையாடிவிட்டு, அவர்கள் ஒவ்வொருவரது கனவுகள் என்ன என்று கேட்டர் கலாம். மாணவர்கள் ஒவ்வொருவரும் மருத்துவராக, பொறியியலாளராக, IAS/IPS அதிகாரிகளாக, தொழில்முனைவோராக, ஆசிரியர்களாக, அரசியல் தலைவர்களாக ஆவோம் என்று கூறினார்கள். அப்பொழுது ஒரு மாணவன் கையைத் தூக்கினான். அவன் பெயர் ஸ்ரீகாந்த், அவன் 9ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். அவன் பார்வையற்றவன். அவன் சொன்னான், ‘கலாம் சார், நான் வாழ்க்கையில், இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத்தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’ என்று. அவனது உயர்ந்த எண்ணத்தை நினைத்து மகிழ்ச்சி அடைந்த குடியரசுத்தலைவர் கலாம் அவர்கள், உடனே அவனிடம், ‘நீ வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ அவ்வாறே ஆக ஆசைப்படுகின்றேன்’ என்றார். அதன்பின் ஸ்ரீகாந்த், தன் கனவை நனவாக்க தினமும் விடாமுயற்சியுடன் உழைத்தான். அவன் 10ம் வகுப்பில் 95 விழுக்காடு மதிப்பெண் பெற்றான். மீண்டும் உழைத்தான், 12ம் வகுப்பில் 98 விழுக்காடு மதிப்பெண் பெற்றான். அவன் மனதில் வெற்றி பெற வேண்டும் என்ற இலட்சியதாகம் கொழுந்துவிட்டு எரிந்தது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள MIT (Machasssute Institute of Technology) யில் கணிணி தொழில்நுட்பவியல் படிக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்தான் அம்மாணவன். ஆந்திர மாநிலத்தில் உள்ள இரு நிறுவனங்கள் சேர்ந்து, அங்கு படிப்பதைப் பற்றி விசாரிக்கும்போது, பார்வையற்றவர்களுக்கு அங்கு படிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் என்று தெரியவந்தது. உடனே ஸ்ரீகாந்த் MITக்கு எழுதினான், ‘நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வைக்கும் போட்டித் தேர்வுக்கு என்னை அனுமதியுங்கள், நான் தேர்ச்சி பெற்றால் உங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்’ என்று. போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆந்திராவின் மலைவாழ் பகுதி மக்கள் மத்தியில் பிறந்த பார்வையற்ற ஸ்ரீகாந்த், உலகத்தின் வளர்ந்த நாடுகளின் மாணவர்களுடன் போட்டி போட்டு, எழுத்துத் தேர்வில் நான்காவதாக வந்தான். தனது விதிகளைத் தளர்த்தி அவனது அறிவுத்திறமைக்கு MIT தலைவணங்கியது. அவனுக்கு உடனே கணிணி தொழில்நுட்ப அறிவியல் துறையில் படிக்க அனுமதி வழங்கியது. அவனை அமெரிக்காவிற்குப் படிக்க அனுப்பி வைத்த GE நிறுவனத்தின் மேலதிகாரி அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார், ‘நீ படித்து முடித்தவுடன் உனக்கு வேலை தயாராக இருக்கிறது’ என்று. அதற்கு நன்றி தெரிவித்து ஸ்ரீகாந்த் மின்னஞ்சல் அனுப்பினான்.

(பார்வையற்ற மாணவர் ஸ்ரீகாந்த் குறித்த இந்த தகவலை, சென்னை பல்கலைக்கழக அரங்கில் மாணவர்களுக்கு எடுத்துரைத்தவர் அப்துல் கலாம் அவர்கள்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2018, 14:36