ஜப்பானில் வெள்ளத்தால் சேதம் ஜப்பானில் வெள்ளத்தால் சேதம் 

இமயமாகும் இளமை – 120 பேரைக் காப்பாற்றிய இளைஞர்

ஜப்பான் வெள்ளத்தில் சிக்கிய பலரை, இளைஞர் Shoichi, jet ski வாகனத்தில் காப்பாற்றியுள்ளார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இம்மாதத்தில் ஜப்பானைத் தாக்கிய கனமழை மற்றும் பெருவெள்ளத்தில், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரிடரின்போது, 29 வயது நிரம்பிய Shoichi Naito என்ற இளைஞர், தனது உயிரைப் பணயம் வைத்து, 120 பேரைக் காப்பாற்றியுள்ளார். ஜூலை 7ம் தேதி காலையில்,  இளைஞர் Shoichi, Sojaவிலுள்ள தனது வீட்டில், தொலைக்காட்சியில் இந்த வெள்ள நிலவரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். அச்சமயத்தில், அவரது பள்ளிக்கூட நண்பரான 25 வயது நிரம்பிய Keisuke Uemori என்பவர், தொலைபேசியில் அவரை அழைத்து, எனது தாய், Mabichoவில் வீட்டிலிருந்து வெளிவர இயலாமல் உள்ளார், எப்படியாவது அவரைக் காப்பாற்று எனக் கெஞ்சியுள்ளார். உடனடியாக, இளைஞர் Shoichi, jet ski ஒன்றைக் கடனாகப் பெற்று, Mabicho விரைந்தார். அங்கே தெருக்களில், வெள்ளம், குப்பைக்கூளங்களால் நிறைந்து நுரைதள்ளி ஓடிக்கொண்டிருந்தது. நீர் மட்டம் வீடுகளின் இரண்டாவது மாடிவரை எட்டியிருந்தது. மேலும் உயர்ந்துகொண்டே இருந்தது. இளைஞர் Shoichi, உடனடியாக நண்பரின் வீட்டிற்குச் சென்று அவரின் தாயை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தார். அதன்பின்னர், ஏனைய வீடுகளிலும், வீடுகளின் மேல்கூரைகளிலும் இருந்தவர்களைக் காப்பாற்றி, அப்பகுதியில் குன்றின்மீது அமைந்திருந்த Shinsenji கோவிலில் சேர்த்துள்ளார். இவ்வாறு ஏறத்தாழ 15 மணி நேரம் அயராது தொடர்ந்து jet ski வாகனத்தை இயக்கி, 120 பேரைக் காப்பாற்றியுள்ளார் இளைஞர் Shoichi. இவர் காப்பாற்றியவர்களில் பலர் வயதானவர்களாய் இருந்ததால், அந்த வாகனத்தில் ஏறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டனராம். அவர்களில் தனது மனைவியுடன் தவித்துக்கொண்டிருந்த 73 வயது நிரம்பிய Tadayoshi Iwata என்பவரிடம், தாத்தா, என் உயிரைக்கொடுத்தாவது உங்களையெல்லாம் காப்பாற்ற வந்துள்ளேன். நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும், கஷ்டப்பட்டு இந்த வாகனத்தில் ஏறுங்கள் என கெஞ்சியிருக்கிறார். அப்போது அந்த முதியவர், "நீதான் இந்த நகரின் ஹீரோ" எனச் சொல்லி ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். இந்தப் பணிக்குப் பின்னர், இளைஞர் Shoichi, Mabicho திரும்பி, தன்னார்வலர்களுடன் சேர்ந்து, அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களுக்கு உதவிகளைத் தொடர்ந்தார் என செய்திகள் கூறுகின்றன. ஜப்பான், கடந்த 36 ஆண்டுகளில், இம்மாதத்தில் கனமழை, பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2018, 15:35