ASIAD-2018-INA-TORCH ASIAD-2018-INA-TORCH 

இமயமாகும் இளமை : கான்பூர் ஐ.ஐ.டி. மாணவர் சாதனை

பள்ளி குழந்தைகள், தங்கள் முதுகில் சுமந்து செல்லும் வகையில், எடை குறைவான, சிறிய மேசையுடன் கூடிய, 'பள்ளிக்கூட பையை (school bag), கான்பூர், ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர், உருவாக்கி சாதனை படைத்துள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி. இந்திய தொழில்நுட்ப மையத்தில் படித்த, 27 வயது நிரம்பிய மாணவர், ஈஷான் சதாசிவன் அவர்கள், பள்ளி குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய, சிறிய மேசை இணைக்கப்பட்ட, 'பள்ளிக்கூட பையை உருவாக்கி உள்ளார். 680 கிராம் எடையுள்ள இந்த பையின் விலை, 400 ரூபாய் மட்டுமே. இந்தப் பையில், இலகு வகை டியூப்களாலான, மடக்கும் கால்களுடன் கூடிய, சிறிய மேசை இணைக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளின் முதுகில் உராய்வு ஏற்பட்டு பாதிப்பு வராமல் தடுக்கும் வகையில், தண்ணீர் புகாத துணியால், இந்தப் பை தயாரிக்கப்பட்டுள்ளது. பையிலிருந்து, தேவைப்படும்போது, மேசையைத் தனியாக பிரித்து எடுக்கலாம். இதற்கு, 'டெஸ்கிட்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது குறித்து, ஈஷான் சதாசிவன் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார். “இலகு ரக மேசையுடன் கூடிய 'பள்ளிக்கூட பையை, தற்போது, நாடு முழுவதும், 10 மாவட்டங்களில், 17 ஆயிரம் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். வருங்காலத்தில், இரவிலும் பயன்படுத்தும் வகையில், எல்.இ.டி., விளக்குடன் கூடிய மேசையுடன் 'பள்ளிக்கூட பை தயாரிக்கப்படவுள்ளது. கடந்த, 2015ம் ஆண்டில், 'புரோஸாக் இன்னவேட்டர்ஸ் லிமிடெட்' என்ற பெயரில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனம் துவக்கினேன். அதற்கு, மத்திய அரசின் நிதியுதவியாக, இருபது இலட்சம் ரூபாய் கிடைத்தது. இலகு ரக பைகளைப் பயன்படுத்துவதால், பள்ளி குழந்தைகளுக்கு, முதுகு வலி வருவதை தடுக்க முடியும். உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் அரசுகளுடன் சேர்ந்து, இலகு ரக பைகளை விற்பனை செய்து வருகிறோம். தெலுங்கானா மாநில அரசுடனும், இது தொடர்பாக பேச்சு நடத்தி வருகிறோம்”

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2018, 14:55