தேடுதல்

Vatican News
மாணவர்களுடன் அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களுடன் அப்துல் கலாம் அவர்கள் 

நீ விரும்புவது, உழைப்பால் உன்னை வந்தடையும்

நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும் என்பதை அடிக்கடி வலியுறுத்திக் கூறியவர் நம் அப்துல்கலாம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

(2015 ஜூலை மாதம் 27ம் தேதி காலமான அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று)

ஏவுகணைகள் குறித்து ஆய்வுச் செய்யும் ஹைதராபாத்தின் DRDL அமைப்பின் உயர் இயக்குனராக முன்னாள் அரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இருந்தபோது, அவரிடம் கதிரேசன் என்பவர் வாகன ஓட்டுனராக பணிபுரிந்தார். நீண்ட நேரம் பணியில் இருந்து விட்டு அப்துல்கலாம் அவர்கள், காரில் ஏறி வீட்டுக்கு செல்ல வரும்பொழுதெல்லாம், கதிரேசன் அவர்கள் எதையாவது படித்துக்கொண்டே இருப்பார். அப்பொழுது ஒரு நாள், என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டார் கலாம். அவர் சொன்னார், சும்மா இருக்கும் நேரத்தில், நான் படித்தால், எனது குழந்தைகளின் படிப்புக்கு உதவியாக இருக்குமே என்று படிக்கிறேன் என்று. நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள் என்று கலாம் அவர்கள் கேட்க, அவரோ, 10ம் வகுப்பு வரை படித்ததாக சொன்னார். மேலும் படிக்க ஆர்வம் இருக்கிறதா என்று கலாம் அவர்கள் மேலும் கேட்க, மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் என்னால் எப்படி படிக்க முடியும் என்று வினவினார் கதிரேசன். உடனே, கலாம் அவர்கள், அவரை திறந்தவெளி பள்ளி மூலம் +2 படிக்க ஏற்பாடு செய்தார். அதை வெற்றிகரமாக முடித்தபின், கதிரேசன் அவர்கள், B.A படித்தார். பிறகு, கலாம் அவர்கள் டெல்லி சென்றுவிட்டார். ஆனால், கதிரேசன் அவர்கள் படிப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து படித்தார். M.A முடித்தார், MPhil முடித்தார், பின்பு அரசியல் அறிவியலில் Ph.D படித்து முடித்து, முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அவர் தமிழ்நாட்டில், மதுரைக்கு பக்கத்திலே மேலூர் அரசுக் கல்லூரியில் பேராசிரியராக பணியேற்றார்.

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும் என்பதை அடிக்கடி வலியுறுத்திக் கூறிய அப்துல்கலாம் அவர்களே, ஒருமுறை சொன்ன செய்தி இது.

27 July 2018, 16:12