தேடுதல்

போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து நெரிசல் 

இமயமாகும் இளமை : 4 சக்கர வாகனத்தை 360 டிகிரி திருப்ப கருவி

கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர், 360 டிகிரியில் திரும்பும் வகையில், நான்கு சக்கர வாகனத்துக்கான கருவியை வடிவமைத்துள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள குருகூரைச் சேர்ந்த 21 வயது நிறைந்த மாணவர் சாமிநாதன் அவர்கள், கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் நான்கு சக்கர வாகனத்தை 360 டிகிரியில் சுழற்றும் வகையில் ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இது குறித்து மாணவர் சாமிநாதன் கூறுகையில், தற்போது வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு அதை மீண்டும் எடுக்கும்போது சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்காக நான் ஓர் இயந்திரத்தை (ஜாக்கி போன்று) வடிவமைத்துள்ளேன். இந்தக் கருவி, 360 டிகிரி சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் வாகனங்களை, மிக எளிதாகத் திருப்பி செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 45 ஆயிரம் ரூபாய் செலவானது. மேலும், மலைப் பகுதியில் செல்லும்போது வாகனத்தை எளிதாகத் திருப்பவும், பாலங்களில் விரிசல் ஏற்படும்போது வாகனத்தை அப்படியே பின்னோக்கித் திருப்பவும் முடியும். இதன் மூலம் நான்கு சக்கர வாகனத்தை 360 டிகிரியிலும், 180 டிகிரியிலும் திருப்ப முடியும். இந்த கண்டுபிடிப்பு கருவிக்கு காப்புரிமை கேட்டு சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு விண்ணப்பித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்(தினகரன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 July 2018, 12:55