குழந்தைகளுக்கு தடுப்பூசி போட காத்திருக்கும் வெனிசுவேலா மக்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட காத்திருக்கும் வெனிசுவேலா மக்கள் 

குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்

குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துக்கள் வழங்குவதை ஊக்குவித்து, வருங்கால சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளன, WHO மற்றும் UNICEF நிறுவனங்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

உலக நலவாழ்வு நிறுவனம் மற்றும் ஐ.நா.வின் குழந்தைகள் நிதி நிறுவனம் ஆகியவற்றின் கூற்றுப்படி, கடந்த ஆண்டில் உலக அளவில், 12 கோடியே 30 இலட்சம் குழந்தைகளுக்கு, பல்வேறு நோய்களுக்கு எதிராக, தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 2017ம் ஆண்டில் அதிகப்படியாக 46 இலட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டிருப்பதற்கு, உலகின் மக்கள் தொகைப் பெருக்கமும் ஒரு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டில் தட்டம்மை நோய்களுக்கு எதிரான தடுப்பு மருந்துக்களை வழங்கும் திட்டத்தில், உலகின் 35 விழுக்காட்டுப் பகுதி உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 52 விழுக்காட்டுப் பகுதியில் இது விரிவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் பெண்களின் கர்ப்பப்பை புற்று நோய்க்கு எதிரான தடுப்பு மருந்துகள் 79 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், மூளைக்காய்ச்சல், மலேரியா, எபோலா போன்ற நோய்களுக்கு எதிரான தடுப்பு மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வளவு மருத்துவ முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ள போதிலும், கடந்த ஆண்டில் ஏறத்தாழ 2 கோடி குழந்தைகளுக்கு அத்தியாவசியமான அனைத்து தடுப்பு மருந்துகளும் வழங்கப்படவில்லை எனற கவலையையும் வெளியிட்டுள்ளன WHO மற்றும் UNICEF நிறுவனங்கள்.

சில நாடுகளில் தொடர்ந்து கொண்டிருக்கும் உள்நாட்டு மோதல்களும், ஏழை நாடுகளின் வசதிகளற்ற நிலையும், சரிநிகரற்ற தன்மைகளும், குழந்தைகள், தங்களுக்குரிய தடுப்பு மருந்துகளைப் பெறமுடியாமல் இருப்பதற்கு காரணமாகின்றன என கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2018, 16:18