தேடுதல்

Vatican News
இந்திய திருஅவை வழிபாடு இந்திய திருஅவை வழிபாடு  (AFP or licensors)

அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' என்ற பட்டம்

கடந்த நான்காண்டுகளில் இந்தியாவில், வன்முறைகளும், பொய்களும், சிறுபான்மையினர் மீது தாக்குதல்களும் அதிகரித்துள்ளதுடன், அமைப்பு முறைகளின் அழிவுகளும் துவங்கியுள்ளன என்கின்றனர், இந்திய சமூக நடவடிக்கையாளர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள் 

இந்தியாவின் கடந்த நான்காண்டு கால ஆட்சியில் வன்முறைகளும் விரோத மனப்பான்மைகளும் பெருகியுள்ளதுடன், தற்போதைய நிலை, அமைப்புமுறைகளின் அழிவுக்கும் இட்டுச் சென்றுள்ளதாக, அண்மையில் இந்திய சமூக நடவடிக்கையாளர்களும் அறிஞர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

கடந்த சனிக்கிழமையன்று புது டில்லியில் கூடிய ஏறத்தாழ 250 சமூக நடவடிக்கையாளர்களும் அறிஞர்களும், ‘இந்திய ஒற்றுமையை சீர்குலைத்தல் - ஒரு நான்காண்டு அறிக்கை’  என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டனர்.

கடந்த நான்காண்டு கால ஆட்சியில், அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை, 'தேச விரோதி' என்பதும், அரசை குறைசொல்பவர்களுக்கு இந்த பட்டம், அரசின் அமைச்சர்களாலும், பி.ஜே.பி. கட்சித் தலைவர்களாலும் அடிக்கடி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது இந்த அறிக்கை.

இந்திய நாடு, பொய்களின் குடியரசாக மாற்றப்பட்டுள்ளதாகவும், பிரதமர் அவர்கள் நாளுக்கு நாள் பொய்களையே எடுத்துரைத்து வருவதாகவும், அதில் தடையின்றி தொடர்வதாகவும் உரைத்தார், சமூக நடவடிக்கையாளர்  Harsh Mander.

தற்போதைய இந்திய அரசு, சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பதாகவும், பி.ஜே.பி.யும், அதன் ஆதரவு பெற்ற சில இந்து குழுக்களும் நாட்டை காவிமயமாக்க முயன்று வருவதாகவும் சமூக ஆர்வலர்களின் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

கல்வித் துறையிலும் காவிமயமாக்கல் முயற்சிகள் குறித்து கவலையை வெளியிடும் இந்த அறிக்கை, சிறுபான்மை மதத்தினர் மீதான தாக்குதல்கள் குறித்து செய்தி வெளியிட தகவல் தொடர்புத்துறை தயக்கம் காட்டி வருவதையும் சுட்டிக்காட்டுகிறது.

17 July 2018, 16:25