தேடுதல்

2018.07.14 ten rupee food for poor Ramu 2018.07.14 ten rupee food for poor Ramu 

வாரம் ஓர் அலசல் – இவர்களை அறிவோம்

“வாழ்க்கை என்பது ஒரு பயணம். அதிலுள்ள சாலைகளும், வசதிகளும் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அதில் கட்டாயம் பயணம் செய்ய வேண்டும்” என்றார் ஆலிவர் ஸ்மித்.

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

 “வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம். அதை நழுவ விடாதீர்கள். வாழ்க்கை என்பது ஒரு கடமை. அதை நிறைவேற்றுங்கள். வாழ்க்கை என்பது ஓர் இலட்சியம், அதைச் சாதியுங்கள், வாழ்க்கை என்பது ஒரு சோகம், அதைத் தாங்கிக்கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது ஒரு போராட்டம், அதை வென்று காட்டுங்கள். வாழ்க்கை என்பது ஒரு பயணம், அதை நடத்தி முடியுங்கள்” என்று சொன்னார், இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம். “வாழ்க்கை என்பது ஒரு பயணம், நாம் அதை நிறுத்தும்போது, காரியங்கள் சரியாகச் செல்லாது” என்று சொன்னார், திருத்தந்தை பிரான்சிஸ். வாழ்க்கை என்பது ஒரு பயணம், அது பந்தயமல்ல. அந்தப் பயணத்தில் எதிர்வரும் அத்தனையையும் சமாளித்து தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருப்பவர்கள் சமூகத்தின் பாராட்டையும் பெறுகிறார்கள்.    

பணியில் நேர்மை

மாணிக்கம் என்பவர், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள செந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 1998ம் ஆண்டு ஓட்டுனராகப் பணிக்குச் சேர்ந்தார். தொடர்ந்து 20 ஆண்டு காலம் தஞ்சாவூர் நகரக் கிளை 2-ல் பணியாற்றி, கடந்த ஜூன் 30-ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் பணி புரிந்த காலத்தில் சிறு விபத்துகூட ஏற்படுத்தியது இல்லை. அதோடு ஒரு நாள்கூட வேலைக்கு வராமல் இருந்தது இல்லை. அதேபோல், போக்குவரத்துக் கழகம் நிர்ணயம் செய்த டீசல் சிக்கனத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்ததோடு, அரசுக்கு அதிக இலாபமும் பெற்றுத் தந்தவர். `மாணிக்கம் போல் எல்லாரும் பணியில் இருந்துவிட்டால் போதும். யாராலும் போக்குவரத்துத் துறையை அசைக்க முடியாது’ எனக் கூறி, சகப் பணியாளர்கள், அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் எனப் பலர் பாராட்டி, வாழ்த்துக்களையும் கூறினர். இவர் ஓட்டுனராகப் பணியாற்றியது மட்டும் இல்லாமல், அச்சமயங்களில் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக நடந்த போராட்டங்களிலும் தொடர்ந்து கலந்துகொண்டு சமூகத்தின்மீது அவருக்கு இருந்த அக்கறையையும் காட்டினார் எனப் பாராட்டு விழாவில் இவரைப் பற்றிப் புகழ்ந்து பேசியுள்ளனர்.

பத்து ரூபாய்க்கு சாப்பாடு

மதுரை ராமு தாத்தா அவர்களுக்கு வயது எண்பதுக்குமேல். இவர் 1967ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏழை எளியவர்களுக்காக பத்து ரூபாய்க்கு சாப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறார். விருதுநகர் அருகே உள்ள வில்லுாரைச் சேர்ந்த இவர், தனது 13வது வயதில் உணவகம் ஒன்றில் உணவு பரிமாறுகிறவராக உழைக்க ஆரம்பித்தார். பல ஊர்களில் பல உணவகங்களில் வேலை பார்த்து இருக்கிறார் இவர். அப்படி ஒரு சமயம் வடலுார் போயிருந்த போது, பசிப்பிணியகற்றும் வள்ளலார் ஆசிரமத்திற்கு சென்றிருக்கிறார். அங்குள்ளவர்கள் வயிறார சாப்பிட்டு மனமார வாழ்த்துவதைப் பார்த்தார் ராமு தாத்தா. அப்போது முதல், தானும் இது போல முடிந்தவரை எளியவர்களின் பசி அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். மதுரை குருவிக்காரன் சாலையில் தெருவோரத்தில் ரோட்டுக்கடை போட்டு, ஒரு இட்லி பத்து பைசாவிற்கு விற்று தனது தொழிலை ஆரம்பித்தார். அப்போது முதல், இப்போது பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடுவது வரை, காசு இல்லாதவர்கள் இவரது கடையில் இலவசமாகச் சாப்பிட்டுவிட்டு போகலாம். மேலும் தினமும் பத்து இருபது சாப்பாட்டை பொட்டலமாகக் கட்டி நடக்க முடியாதவர்களுக்கு கொண்டுபோய் கொடுத்துவிட்டு வருவார். இப்போது வயதாகிவிட்டதால் கொடுத்தனுப்பிவிடுகிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு, ராமு தாத்தாவின் மனைவி பூரணத்தம்மாள் இறந்துபோனார். அவரின் ஆசையைச் சொல்கிறார் ராமு தாத்தா...

அந்த மகராசி இல்லாமல் நான் மனதால் கஷ்டப்படுறேன், ஆனால் கடைக்கு நம்பி வரக்கூடிய தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியோர் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, இந்த வயதிலும் மனதார உழைத்துக் கொண்டு இருக்கிறேன்'' என்று நெகிழ்கிறார் ராமு தாத்தா. இவரின் குடும்பத்தினரும் இவருக்கு நிறையவே உதவுகின்றனர். மேலும் சொல்கிறார் ராமு தாத்தா...

அந்தந்த மாதம் உணவுப்பொருள் வாங்குவதற்கும், வேலையாட்களுக்கு சம்பளம் போடுவதற்கும் எவ்வளவு செலவாகுமோ? அதை வைத்துதான் சாப்பாட்டின் விலையை நிர்ணயம் செய்கிறேன். எனது செலவிற்கு கட்டுப்படியானால் போதும். ஒரு பைசா இலாபம் வேண்டாம். மதிய சாப்பாடு பத்து ரூபாய்க்கு தருவதுபோல இப்போது காலையில் இட்லி தோசையும் குறைந்த விலைக்குத் தருகிறேன். யாரிடமும் எந்தவித உதவியும் எதிர்பார்ப்பது இல்லை. இருந்தாலும் சில புண்ணியவான்கள் தேடிவந்து உதவும் போது மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறேன். அப்படித்தான் கோலி சோடா குழுவினர் வழங்கிய பரிசினையும் பாராட்டையும் ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லும் ராமு தாத்தா தொல்லையாக நினைத்து கைபேசிக்கு விடை கொடுத்துவிட்டார் என, இவர் பற்றி பல தினத்தாள்களில் வாசித்தோம். ஆம், கருணைகொண்ட மனிதரெல்லாம் கடவுள் வடிவங்கள். இதையறிந்து செயல்படுபவர்கள், சமுதாயத்திற்கு உயரிய சேவை செய்கிறார்கள்.

இரயில் பயணத்தில் நற்பணி

ஆதர்ஷ் ஸ்ரீவத்சவா என்பவர், இம்மாதம் 5ம் தேதி இரவு, முசாபர் நகர், பந்த்ரா அவந்த் விரைவு இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவரது பெட்டியிலேயே அவருடன் 25 சிறுமிகளும் உடன் பயணித்தனர். அப்போது அந்த 25 சிறுமிகளும், அழுவதும், மாட்டிக்கொண்ட உணர்வோடு தவிப்பதும் தெரியவந்தது. அச்சிறுமிகள் அனைவரும் ஏதோ ஒரு சிக்கலில் தவிப்பதை அவர் உணர்ந்துள்ளார். உடனே தனது கைபேசி வழியாக, அச்சிறுமிகளின் அப்போதைய நிலையை, இந்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், பிரதமர் நரேந்திர மோடி, தொலைத் தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய தலைவர்களுக்கு ட்வீட் செய்தார். அவரது ட்வீட்டை தொடர்ந்து, சில மணிநேரங்களிலேயே வாரணாசி மற்றும் லக்னோ இரயில்வே உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்கள் இரயில்வே பாதுகாப்புப் படையினரோடு இணைந்து அப்பெண்களை மீட்டனர். இம்மீட்புப் பணியில் சில இரயில்வே பாதுகாப்புப் படை ஊழியர்கள், சாதாரண உடைகளோடு இரயிலில் நுழைந்தனர். அவர்கள் கப்தான் கஞ்ச்சிலிருந்து கோரக்பூர் வரை சிறுமிகள் பயணித்த பெட்டியிலேயே அவர்களுடன் பாதுகாப்பாக வந்து மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் சிறார் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து கடத்தப்பட்டவர்கள்.

உள்ளம் பெரும் கோவில். ஊன் உடம்பு ஆலயம். சக மனிதரிடம் அன்பும் அக்கறையும் காட்டுவதுதான், மனிதரின் நெறிசார்ந்த வாழ்வுக்கு எடுத்துக்காட்டு.   தினமும் வாழ்வுப் பயணத்தில் பல்வேறு நிலைகளிலுள்ள மனிதர்களைச் சந்திக்கிறோம். அவர்களில் சிலருக்கு உடனடி உதவி தேவைப்படலாம். இதையறிந்து செயல்படுபவர், பிறரின் தேவைகளுக்கு உதவுவதோடு அவர்களின் வாழ்வுப் பயணத்தையும் எளிதாக்குகின்றனர். அதற்கு முதலில் பிறர்மீது அன்பும், கருணையும், அக்கறையும் அவசியம். யார் எக்கேடு கெட்டால் என்ன, நான் நன்றாக இருந்தால்போதும் என்ற சுயநலக்கோட்டைக்குள் வாழ்ந்தால், அந்தக் கோட்டைக்குள் உதவி தேவைப்படும்போது யாரும் உதவ முன்வரமாட்டார்கள், ஏனெனில் அக்கோட்டைக்குள் நடப்பது வெளியில் தெரிவதில்லை.

அன்பு பற்றி பாடம்

ஆசிரியர் ஒருவர், தன் வகுப்பு மாணவிகள் நால்வரிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று, சொல்லி அனுப்பி வைத்தார். திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள். ஏனென்று கேட்டபோது சொன்னாள்: “நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்…” இவ்வாறு பதில் சொன்ன அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்: “அன்பு என்றால் இதுதான்!”. ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும். எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே. நாம் உலகிற்கு எதையேனும் கொடுக்க வேண்டுமென நினைத்தால் அன்பைக் கொடுப்போம்… ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்றுதான்… ஆனால் உலகம் அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்…

எனவே நம் வாழ்வுப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் அனைவரிடமும் அன்புடன் பழகுவோம். நம் குடும்பத்தில் பெற்றோரிடம், தாத்தா பாட்டிகளிடம், உடன்பிறப்புக்களிடம், உண்மையான அன்பைப் பொழிவோம். சமூகத்தின்மீது அன்புகொண்டு செயல்படும் மனிதர்களில் நாமும் ஒருவராக வாழ முயற்சிப்போம்

 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2018, 09:42