தேடுதல்

2018ம் ஆண்டின் மகசேசே விருதுகள் 2018ம் ஆண்டின் மகசேசே விருதுகள் 

ஆறு பேருக்கு 2018ம் ஆண்டின் ஆசிய நொபெல் விருது

மனித வாழ்வை மேம்படுத்தவும், சமூகங்களில் மாற்றங்களைக் கொணரவும் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு இவ்வாண்டின் மகசேசே விருதுகள்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கிழக்கு திமோர் நாட்டின் ஒரு கத்தோலிக்கர், இந்தியாவின் ஓர் உளவியல் மருத்துவர், பிலிப்பீன்சின் ஓர் அமைதி ஆர்வலர், வியட்னாமின் ஒரு சமூகப்பணியாளர் உட்பட ஆறு பேருக்கு 2018ம் ஆண்டின் மகசேசே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தெருக்களில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கு புகலிடம், உணவு, உளவியல் சகிச்சை ஆகியவற்றை இலவசமாக வழங்குவதற்கென, இந்தியாவின் Bharat Vatwani என்பவரும், அவரது துணைவியாரும் இணைந்து 1988ம் ஆண்டில் Shraddha மறுவாழ்வு மையத்தை உருவாக்கினார்கள்.

மேலும், இவ்விருதுக்கென அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமோர் இந்தியரான Sonam Wangchuk என்பவர், லடாக், மாணவர்களின் கல்வி மற்றும் கலாச்சார இயக்கத்தை ஆரம்பித்தவர். இவரின் இயக்கம் பயிற்றுவித்து வரும் மாணவர்களில் 95 விழுக்காட்டினர், அரசுத் தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள்.

இன்னும், 1970களின் இறுதியில் கம்போடியாவின் Pol Pot கொடுங்கோல் ஆட்சியில் இடம்பெற்ற படுகொலைகளை ஆவணப்படுத்தி, அவற்றை வெளியுலகுக்குத் தெரியப்படுத்துவதிலும், நீதி விசாரணை, தேசிய ஒப்புரவு மற்றும் தேசிய அளவில் குணமாக்கும் பணிகளிலும் ஈடுபட்ட Youk Chhang என்பவரும், இவ்விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.

Mana Lou என அழைக்கப்படும், கிழக்குத் திமோர் நாட்டு Maria de Lourdes Martins Cruz என்பவர், அந்நாட்டிலுள்ள மிக வறிய மக்களை முன்னேற்றுவதற்கென, Maun Alin Iha Kristu, எனப்படும் கத்தோலிக்க பொதுநிலையினர் அர்ப்பண வாழ்வு அமைப்பை உருவாக்கியவர். ஏழைகளுக்கென இவர் உருவாக்கிய மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 300 பேர் இலவசமாகச் சிகிச்சை பெறுகின்றனர். இது, கிழக்குத் திமோரிலுள்ள மிகப் பெரிய காசநோய் மருத்துவமனையாகும்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் Howard Dee என்பவர், ஓர் இயேசு சபை அருள்பணியாளருடன் இணைந்து, சமூக முன்னேற்றத்திற்கென தொழில் ஒன்றைத் தொடங்கியவர். இவர், பிலிப்பீன்ஸ் அரசுக்கும், மோரோ புரட்சியாளர்களுக்கும் இடையே அமைதி கலந்துரையாடலில் இடைநிலையாளராகச் செயலாற்றியவர்.

வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி மனிலாவின் கலாச்சார மையத்தில் நடைபெறும் நிகழ்வில் இந்த ஆறு பேரும் இவ்விருதைப் பெறுவார்கள்.

1957ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட, ஆசியாவின் மிக உயரிய விருதான மகசேசே விருது, இவ்வாண்டு உட்பட இதுவரை 330 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2018, 16:25