தேடுதல்

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தின் கூட்டம் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தின் கூட்டம்  (Lisa Leutner)

யூத விரோதப் போக்குகள் மீண்டும் இடம்பெறாதிருக்க கல்வியின் தேவை

நாத்சி வதைகள் குறித்த நினைவுகளும் கல்வியும் யூத விரோதப் போக்குகளை தடுப்பதற்கு சிறந்த வழி என்ற தீர்மானம் 2014ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆஷ்விச்-பிர்கெனாவ் நாத்சி வதை முகாம் விடுவிக்கப்பட்டு அழிக்கப்பட்டதன் 80ஆம் ஆண்டு நினைவுகள், இரண்டாம் உலகப் போரின்போது நாத்சி ஆட்சியால் திட்டமிடப்பட்டவை, மற்றும் அவை மறக்கப்படக்கூடாதவை என்பதை நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டி நிற்கின்றன என ஐரோப்பிய கூட்டமொன்றில் உரையாற்றினார் திருப்பீடப் பிரதிநிதி பேரருள்திரு ரிச்சர்டு கிரா(RICHARD GYHRA).

OSCE எனப்படும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தின் 1506வது கூட்டத்தில் ஜனவரி 30, வியாழனன்று உரையாற்றிய அந்நிறுவனத்திற்கான திருப்பீடப் பிரதிநிதி, பேரருள்திரு கிரா அவர்கள், 1945ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி, ஆஷ்விச்-பிர்கெனாவ் வதை முகாம் விடுவிக்கப்பட்டு அழிக்கப்பட்டதன் 80ஆம் ஆண்டு நினைவுகள், இந்த இன அழிவுகள் மீண்டும் இடம்பெறாவகையில் நம்மில் தங்கியிருக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார்.

பல இலட்சக்கணக்கான யூதர்களும் வேறு மத்தினரும் கொல்லப்பட்டது நம் நினைவுகளில் நின்று, பகைமை உணர்வுகளும் வன்முறைகளும் எச்சூழலிலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை என்பதை நினைவுறுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பை முன்வைத்த பேரருள்திரு கிரா அவர்கள், இந்த அனுபவம் உலக அமைதி நோக்கிய நம் வருங்கால தீர்மானங்களுக்கு உதவ வேண்டும் என்ற திருத்தந்தையின் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டினார்.

நாத்சி வதைகள் குறித்த நினைவுகளும் கல்வியும் யூத விரோதப் போக்குகளை தடுப்பதற்கு சிறந்த வழி என்ற தீர்மானம் 2014ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளபோதிலும், யூத விரோதப்போக்குகளின் பழைய மற்றும் புதிய வடிவங்கள் ஆழ்ந்த கவலையைத் தருவதாக உள்ளன என்பதையும் எடுத்துரைத்தார் பேரருள்திரு கிரா.

யூத விரோதப் போக்குகளை களையவேண்டுமெனில் அமைதிக்கான கல்வி இடம்பெறவேண்டும் மற்றும், மற்றவர்களை உடன்பிறந்த சகோதரர்களாக ஏற்றுக்கொள்ளும் அர்ப்பணம் தேவை என்பதை நினைவூட்டிய திருப்பீடப்பிரதிநிதி, கடந்த காலங்களின் வரலாற்று விழிப்புணர்வும் இன்றியமையாதது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நாத்சி வதைப்போர் தொடர்புடைய இந்த நினைவு நாள் தற்போதைய தலைமுறைக்கும் வருங்கால தலைமுறைக்கும் அமைதியை ஊக்குவிப்பது குறித்தும், மனித மாண்பை மதிப்பது குறித்தும் பெரிய அளவில் பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார் OSCE நிரந்தர அமைப்புக்கான பிரதிநிதி பேரருள்திரு கிரா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 ஜனவரி 2025, 14:56