செயற்கை நுண்ணறிவால் எதிர்நோக்கப்படும் சவால்கள் குறித்த அறிக்கை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
செயற்கை நுண்ணறிவுக்கும் மனித அறிவுக்கும் இடையேயான உறவுகள் குறித்து திருப்பீடத்தின் விசுவாசக்கோட்பாட்டுத் துறையும், கலாச்சாரம் மற்றும் கல்விக்கானத் துறையும் இணைந்து கல்வி, பொருளாதாரம், வேலை, நல ஆதரவு, மனிதகுல மற்றும் அனைத்துலக உறவுகளிலும், போரிலும் செயற்கை நுண்ணறிவால் எதிர்நோக்கப்படும் சவால்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
விசுவாசத்தை எடுத்துச் சென்று பரப்புபவர்களுக்கும், அனைத்து அறிவியல் மற்றும் தொழில்துறை முன்னேற்றங்கள் மனிதனுக்கும் பொது நலனுக்கும் சேவையாற்றுவதாக இருக்க வேண்டும் என ஆவல் கொள்பவர்களுக்கும் என வெளியிடப்பட்டுள்ள இந்த Antiqua et Nova என்ற ஏடு, செயற்கை நுண்ணறிவு முன்வைக்கும் ஆபத்துக்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு இறைவனுக்கும் மனிதகுலத்திற்கும் இடையேயான ஒத்துழைப்பையும் ஒருபக்கம் எடுத்துரைப்பதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
புதிய கண்டுபிடிப்புகளின் உறுதியிட்டுக் கூறமுடியாத விளைவுகள் குறித்த ஆழ்ந்த அக்கறையையும் வெளியிடும் திருப்பீட ஏடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல், இந்த செயற்கை நுண்ணறிவு என்பது தனியான ஒரு நுண்ணறிவு என்ற முறையில் நோக்கப்படாமல் மனித அறிவினால் உருவாக்கப்பட்ட ஒன்றாக நடத்தப்படவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு என்பது நல்லவைகள் நோக்கியும் தீயவைகள் நோக்கியும் நம்மை இட்டுச் செல்லலாம் எனக்கூறும் இவ்வேடு, செயற்கை நுண்ணறிவு என்பது புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தாலும், பாகுபாடுகள், ஏழ்மை, எண்ணிம இடைவெளி, சரிசமமற்ற நிலைகள், ஒரே இடத்தில் அதிகாரத்தை குவிக்க உதவுதல், ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக கருத்துக்களை உருவாக்குதல் போன்ற எதிர்பதங்களுக்கும் பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
மனித தலையீடு இல்லாமலேயே செயற்கை நுண்ணறிவு மூலம் ஆயுதங்கள் பயன்படுத்தப்படத் துவங்குவது பெரிய ஒழுக்கரீதி கவலைகளுக்கு இட்டுச் செல்லும் என்பதையும் எடுத்துரைக்கும் திருப்பீடம், போருக்கு உதவும் தொழில்நுட்பங்களால் அப்பாவி மக்கள் குறிப்பாக குழந்தைகள் பாதிப்பை அனுபவிப்பார்கள் என மேலும் கவலையை வெளியிடுகிறது.
செயற்கை நுண்ணறிவு என்பது, கேடுதரும் தனிமைப்படுத்தலுக்கு சமூகத்தின் ஒரு பகுதியை இட்டுச் செல்லலாம் எனவும், பொருளாதாரமும் வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும் விதம் குறித்தும், நல ஆதரவு மற்றும் கல்வியில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும், தவறான செய்திகளைப் பரப்புதல், தனியார் சுதந்திரம் பறிக்கப்படுதல், படைப்புக்கும் நமக்குமுள்ள உறவு, இறைவனுடன் நாம் கொண்டிருக்கும் உறவு போன்றவைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது எனவும் செயற்கை நுண்ணறிவு குறித்து தன் சந்தேகங்களை வெளியிட்டுள்ளது விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை, மற்றும் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறை இணைந்து வெளியிட்டுள்ள இவ்வேடு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்