தேடுதல்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன வன்முறை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன வன்முறை  (2023 Getty Images)

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன வன்முறைகளால் துயர்கள்

அண்மை கிழக்கில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண பணி நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி பேராயர் கப்ரியேலே காச்சா

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

அக்டோபர் 7 அன்று ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களால் இஸ்ரேலிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு திருப்பீடம் தனது கண்டனத்தை மீண்டும் வலியுறுத்துவதாக திருப்பீடத்தின் நிரந்தர பிரதிநிதி பேராயர் கப்ரியேலே காச்சா தெரிவித்துள்ளார்.

காசா பகுதியின் பேரழிவுகரமான சூழ்நிலையின் விளைவாக பல குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனியர்களின் உயிரழப்பு, நூறாயிரக்கணக்கான மக்களின் இடம்பெயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை போன்றவை ஏற்பட்டிருப்பது குறித்து திருப்பீடம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அகதிகளி்ன் முகாம்கள், பள்ளி வளாகங்களை குறிவைக்காமல் இருப்பது கட்டாயமாகும் என, ஒவ்வொரு குடிமகனின் முழுமையான பாதுகாப்பிற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளை எதிரொலிப்பதாக பேராயர் கப்ரியேலே காச்சாவின் விண்ணப்பமும் இருந்தது.

இந்த இருண்ட நேரங்களில் அண்மை கிழக்கில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணப் பணி நிறுவனத்தின் (UNRWA) சேவையை திருப்பீடம் மீண்டும் ஊக்குவிக்கிறது என்ற பேராயர் காச்சா அவர்கள், UNRWA அமைப்பு, மனித வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், அண்டை நாடுகளில் குடியேறியவர்கள் உட்பட பாலஸ்தீனிய அகதிகளுக்கு மனிதாபிமான சேவைகளை வழங்குவதில் மட்டுமல்ல, அமைதியான எதிர்காலம் சாத்தியம் என்ற நம்பிக்கையின் ஆதாரமாகவும் உள்ளது என பாராட்டினார்.

UNRWA வழங்கும் அத்தியாவசியச் சேவைகளின் இன்றியமையாத தன்மையைக் கருத்தில் கொண்டு, UNRWAஇன் வரவு செலவுத் திட்டத்தில், தேவைப்படும் சேவைகளுக்கும் செலவினங்களுக்கும் இடையே வளர்ந்து வரும் இடைவெளி குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார் பேராயர் காச்சா.

பாலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ராயேலர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் நீதியான அமைதிதான் பாலஸ்தீன அகதிகளின் அவலத்திற்கு ஒரே நிலையான தீர்வு எனவும் கூறினார் பேராயர்.

இவ்விரு அரசுகளின் அதிகாரிகள், முழு சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன், நீதி மற்றும் ஒருவர் மற்றவருக்கான மதிப்பின் அடிப்படையிலான  அமைதிக்கான உரையாடல் மட்டுமே  கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மிகவும் பிரியமான இந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ள வன்முறைச் சுழற்சிக்கு நிரந்தர முடிவுக்கான ஒரே சாத்தியமான வழியென தெரி்வித்தள்ளார் பேராயர் காச்சா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2023, 15:43