தேடுதல்

மீன்பிடிக்கும் கடற்கரை மீன்பிடிக்கும் கடற்கரை  (AFP or licensors)

மீன்பிடிப்போர் அனைவரும், நல்ல வாழ்வைப் பெற திருஅவை ஆவல்

மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவரோடு, தொடர்ந்து ஒருமைப்பாட்டையும் நம் சமூக பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தி அவர்களின் உண்மையானத் தேவைகளை நிறைவுச் செய்வதில் உதவ வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலக மீன்பிடி தினம் குறித்து உரோம் நகரின் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தில் இடம்பெற்றக் கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய திருப்பீடப் பிரதிநிதி, பேரருள்திரு Fernando Chica Arellano அவர்கள், மீன்பிடித் துறைமுகங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

உரோம் நகரில் தங்கள் தலைமையிடங்களைக் கொண்டிருக்கும் FAO, IFAD மற்றும் WFP என்ற விவசாய உற்பத்தி மற்றும் உணவு குறித்த ஐ.நா. அமைப்புக்களுக்கு திருப்பீடப் பிரதிநிதியாகச் செயல்படும் பேரருள்திரு Chica Arellano அவர்கள், புயலின்போது கரை ஒதுங்கும் இடமாகவும், புதிய இடங்களைக் கண்டுபிடிப்பதற்கு தன் பயணத்தைத் துவக்கும் இடமாகவும், சந்திப்பின், காத்திருப்பின், அறிவுரையும் தகவலும் பெறும் இடமாகவும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் இடமாகவும் துறைமுகங்கள் செயல்படுகின்றன என எடுத்துரைத்தார்.

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும், ஒரு நல்ல வாழ்வைப் பெற வேண்டும் என்பதில் திருஅவை எப்போதும் மீனவர்கள் பக்கமே இருப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, மீன்பிடித் தொழில் ஒழுங்குப்படுத்தப்பட்டு வருவது குறித்து மிகிழ்வதாகவும் மேலும் கூறினார் பேரருள்திரு Chica Arellano.

மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவரோடு, தொடர்ந்து ஒருமைப்பாட்டையும் நம் சமூக பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தி அவர்களின் உண்மையானத் தேவைகளை நிறைவுச் செய்வதில் உதவ வேண்டியது, ஒரே குடும்பமாக இருக்கும் நம் அனைவரின் கடமையாகும் எனவும் கூறினார் திருப்பீடப் பிரதிநிதி.

உடன்பிறந்த உணர்வு நிலை, நேர்மையான ஒத்துழைப்பு, ஒருமைப்பாடு ஆகியவைகளின் துணைகொண்டு, தன்னலத்தையும் பாராமுகத்தையும் வெற்றிகண்டு, மனித குல காயங்களை அகற்றுவோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் பேரருள்திரு Chica Arellano.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2023, 15:35