குழந்தைகள் கடவுளால் அன்பு செய்யப்படும் உயிர்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
குழந்தைகள் இந்த உலகிற்கு எந்த வழியில் வந்திருந்தாலும், அவர்கள் எப்போதும் கடவுளால் விரும்பப்படும் மற்றும் அன்பு செய்யப்படும் உயிர்கள் என்றும், திருஅவையின் கதவுகள் திருமுழுக்கு அருளடையாளத்திற்கு மூடப்படக்கூடாது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரிகளையும் மேற்கோள்காட்டியுள்ளார் முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி.
திருமுழுக்கு அருளடையாளம் என்னும் இறைஅருள், பாரம்பரியம், அருள்பணியாளர்களின் பழக்கவழக்கங்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் பற்றிய விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத் துறையின் பதில்கள் குறித்த தனது சிந்தனைகளையும் கருத்துக்களையும் தலையங்கமாக வெளியிட்டுள்ளார் திருப்பீட தகவல் தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி.
திருமுழுக்கு அருளடையாளம் பெறும் குழந்தைகள் ஆன்மிக அருளைப் பெறுவதற்காகவும், தங்களது பெற்றோர் மற்றும் ஞானப்பெற்றோரிடமிருந்து மட்டுமல்லாது, தாங்கள் வாழ்கின்ற சமூகத்திலிருந்து நன்மைகளைப் பெறுவதற்காகவும் திருஅவை முன் கொண்டு வரப்படுகின்றார்கள் என்ற புனித அகுஸ்தீனின் வார்த்தைகளையும் நினைவுகூர்ந்துள்ளார் தொர்னியெல்லி.
நேர்மையாளர்களுக்கு வெகுமதியையும், பாவிகளுக்கு மன்னிப்பையும் வழங்கும் திருவருளடையாளங்கள், கடவுளின் இரக்கமிகு செயல்கள் என்பதை நாம் நம்ப வேண்டும் என்றும், அன்பு செய்வதில், மன்னிப்பதில், அரவணைப்பதில், இரக்கம் காட்டுவதில், முதன்மையாகச் செயல்பட்டு பிறரின் இதயங்களை மனமாற்றத்திற்கு அழைத்துச் சென்ற இயேசுவை நற்செய்தியின் பக்கங்கள் எடுத்துரைக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் தொர்னியெல்லி.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, கர்தினால் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ் அவர்கள் கையொப்பமிட்ட ஆவணமானது, திருஅவையின் கதவுகள் திருமுழுக்கு அருளடையாளத்திற்கு மூடப்படக்கூடாது என்றும், திருஅவை தன்னை ஒரு வணிகக் கூடமாக மாற்றக்கூடாது என்றும் வலியுறுத்துவதாக எடுத்துரைத்துள்ளார்.
கடினமான வாழ்க்கைப் பாதைகளிலும், நாம் அனைவரையும் வரவேற்று முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ள தொர்னியெல்லி அவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் வாடகைத்தாயின் வழியாகப் பெறப்படும் குழந்தைகளுக்கு திருமுழுக்கு அருளடையாளம் பெறுவதற்கானத் தடைகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
258 ஆம் ஆண்டுகளில் கார்தாஜினே பகுதியின் ஆயராக இருந்த புனித சைப்ரியன், ஆப்பிரிக்க ஆயர்களின் பேரவையில் பங்கேற்றபோது எடுத்துரைத்த, ‘இறைவனின் இரக்கத்தையும் அருளையும் எந்த மனிதனாலும் மறுக்க முடியாது" என்ற கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ளார் முனைவர் தொர்னியெல்லி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்