தேடுதல்

தீபாவளி வாழ்த்து தீபாவளி வாழ்த்து  (ANSA)

தூரக்கனவாகவே இருக்கின்றபோதிலும், அமைதி இயலக்கூடியதே

சகிப்பற்றதன்மை, பகையுணர்வு, அநீதி, பாகுபாட்டுடன் நடத்தப்படல், இன, கலாச்சார, பொருளாதார, மொழி, மற்றும் மதத்தின் அடிப்படையில் வன்தாக்குதலை மேற்கொள்ளல் போன்றவை அகற்றப்பட வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அனைத்திலும் மேலான ஒளியாம் இறைவன் நம் இதயங்களையும் மனங்களையும் ஒளிர்வித்து, நம் வீடுகளையும் அண்மை வீடுகளையும் ஆசீர்வதித்து, நம் வாழ்வை அமைதியிலும் மகிழ்ச்சியிலும் நிரப்புவாராக, என தீபாவளி வாழ்த்துக்களை உலக இந்து சமுதாயத்திற்கு வழங்கியுள்ளது திருப்பீடம்.

நவம்பர் மாதம் 12ஆம் தேதி சிறப்பிக்கப்படும் ஒளிவிழாவாம் தீபாவளியை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத்துறை, புனித திருத்தந்தை 23ஆம் யோவான் அவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட Pacem in Terris என்ற திருமடலின் வார்த்தைகளுடன் தன் செய்தியை துவக்கியுள்ளது.

1963ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த சுற்றுமடல், உலகம் அணுஆயுதப் போரின் விளிம்பில் இருந்த அந்த காலத்தில், ஒருவர் ஒருவர் மீதான நம்பிக்கை, பேச்சுவார்த்தைகள் ஆகியவை வழியாக அமைதிக்கு ஒன்றிணைந்து உழைக்குமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்ததைச் சுட்டிக்காட்டும் இந்த தீபாவளி வாழ்த்துச் செய்தி, உண்மையில் தன் ஆதாரத்தைக் கொள்ளாமல், நீதியில் கட்டியெழுப்பப்படாமல், பிறரன்பு நடவடிக்கைகளால் ஊட்டமளிக்கப்படாமல், சுதந்திரச் சூழலில் வளர்க்கப்படாதபோது அமைதி என்பது வெற்று வார்த்தையாகவே இருக்கும் என்ற திருத்தந்தை 23ஆம் யோவான் குறிப்பிட்டிருந்ததையும் மேற்கோள் காட்டியுள்ளது.

உண்மை, நீதி, அன்பு மற்றும் சுதந்திரத்தில் அமைதியைக் கட்டியெழுப்புவது குறித்த சிந்தனைகளை பகிர விரும்புவதாகக் கூறும் இச்செய்தி, Pacem in Terris திருமடல் கடந்த அறுபது ஆண்டுகளில், மனிதர்களின் மாண்பு குறித்தும், அவர்களின் உரிமைகள் குறித்தும், பொதுநலனுக்காக அவர்கள் ஒருமைப்பாட்டுடன் உழைக்கவேண்டிய தேவை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதை எடுத்துரைக்கிறது.

அமைதி குறித்த இத்திருமடலின் ஏக்கம் ஒரு தூரக்கனவாகவே இருக்கின்றபோதிலும், அனைத்து மத நம்பிக்கையாளர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் ஒத்துழைப்புடன் இது நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என மேலும் உரைக்கிறது தீபாவளி வாழ்த்துச் செய்தி.

மனிதனின் மத உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளும் சுதந்திரமும் மதிக்கப்பட வேண்டும், சகிப்பற்றதன்மை, பகைமையுணர்வு, அநீதி, பாகுபாட்டுடன் நடத்தப்படல், இன, கலாச்சார, பொருளாதார, மொழி, மற்றும் மதத்தின் அடிப்படையில் வன்தாக்குதலை மேற்கொள்ளல் போன்றவை அகற்றப்பட வேண்டும் எனக்கூறும் இந்த செய்தி, அமைதி என்பது இயலக்கூடியதே என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

உண்மை, நீதி, அன்பு, மற்றும் விடுதலை என்ற நான்கு தூண்களில் அமைதி கட்டியெழுப்பப்படுவதால், மத நம்பிக்கையாளர்கள் அனைவரும் இந்த மதிப்பீடுகளில் உருவாக்கப்பட வேண்டும் என்பதை மதத்தலைவர்கள் உறுதிச் செய்ய வேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறது  தீபாவளி வாழ்த்துச் செய்தி. 

பொதுநலனை மனதில் கொண்டவர்களாக, இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து அமைதியின் கலைஞர்களாக செயல்பட வேண்டும் என்ற விண்ணப்பமும் இச்செய்தியில் விடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2023, 15:54