தேடுதல்

கர்தினால் பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின்   (ANSA)

காலநிலை மாற்றத்தில் அக்கறை காட்டுகிறது திருப்பீடம்

காலநிலை மாற்றம் குறித்து நாம் இரண்டு காரியங்களில் கவனம் செலுத்தவேண்டும். முதலாவது, வாழ்க்கை முறைகளில் மாற்றத்தைக் கொணர்வது, இரண்டாவது இதுகுறித்த கல்வி அறிவைப் பெறுவது : கர்தினால் பியெத்ரோ பரோலின்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் COP28, அதாவது காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. கருத்தரங்கிற்கு முன்பாக, காலநிலை நெருக்கடியைத் தீர்ப்பதில் திருப்பீடம் மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

நவம்பர் 6, இத்திங்களன்று, மாலை அபுதாபியில் நடைபெற்ற கையெழுத்து விழாவின் முடிவில் வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், திருப்பீடம் மற்றும் திருத்தந்தையின் இந்த உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினார் கர்தினால் பரோலின் அவர்கள்,

காலநிலை மாற்றத்தில் பல்சமயத்  தலைவர்கள் ஆற்றக்கூடிய பங்கு என்ன என்பது குறித்தும், இது ஒரு மதச்சார்பற்ற பிரச்சனையாகப் பலரால் பார்க்கப்படுவது ஏன் என்ற கேள்வி குறித்தும் கேட்கப்பட்டபோது, ஆம், இது ஒரு மதச்சார்பற்ற பிரச்சனைதான் என்றும், காரணம், உண்மையில், இது அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் உலகம், மற்றும் அறிவியல் அறிஞர்கள் மற்றும் பலரால் கையாளப்படுகிறது என்றும் எடுத்துக்காட்டினார் கர்தினால் பரோலின்.

திருப்பீடம் குறித்து பேசுகையில், மதங்களுக்கிடையில் திருப்பீடத்திற்குத் தூதரகப் பிரதிநிதித்துவம் இருப்பதில் உலகளவில் ஒரு தனித்துவமான பங்கு உள்ளது என்றும், காலநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் திருத்தந்தை மற்றும் திருப்பீடத்தின் தனித்துவமான பங்கை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது நிச்சயமாக, திருப்பீடம், காலநிலை மாற்றம் குறித்த பிரச்சனையின் அனைத்துக் கண்ணோட்டங்களிலும் ஆர்வமாக உள்ளது என்றும், வாயு உமிழ்வைக் குறைத்தல், கடல் மட்டம் உயர்வதில் உள்ள பிரச்சனை மற்றும் பலவற்றைப் பற்றி திருப்பீடம் பேசி வருகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றம் குறித்து நாம் இரண்டு காரியங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், வாழ்க்கை முறைகளில் மாற்றத்தைக் கொணர்வதும், இதுகுறித்த கல்வி அறிவைப் பெறுவதும் இந்த இரண்டு காரியங்களில் அடங்குகின்றன என்பதையும் குறிப்பிட்டார்.

மேலும் நாம் உண்மையில் நம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், இதன் காரணமாக மானிடருக்கும் இந்த இயற்கைக்கும் தீங்கு விளைவிக்காமல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறுவது போன்று நாம் அனைவரும் படைப்பினைப் பாதுகாக்கும் பொறுப்பாளர்களாக மாறமுடியும் என்றும், கடவுள் நம்மைப் படைத்தபோது, அவர்  மனிதகுலத்திடம் ஒப்படைத்த பணி இதுதான் என்றும் சுட்டிக்காட்டினார் கர்தினால் பரோலின்.

காலநிலை மாற்றத்தைக் கையாள்வதில் நாம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், ஆனால் புதிய தலைமுறையினருக்கு இதுகுறித்த கல்வியை சரியாக வழங்குவதன் வழியாக நாம் உண்மையில் பெரும் பங்களிப்பை வழங்க முடியும் என்று தான் உணர்வதாகவும் கூறியுள்ளார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2023, 14:46