காலநிலை மாற்றம் குறித்த செயல்பாடுகளில் அதிக கவனம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
2023ஆம் ஆண்டிற்குள் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருப்பதை சாத்தியமாக்குதல், வருடாந்திர வெப்ப உமிழ்வை 43 விழுக்காடு குறைத்தல் போன்ற பணிகளில் தீவிர முயற்சி மற்றும் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருவதாக எடுத்துரைத்தார் முனைவர் சுல்தான் அல் ஜாபர்.
அக்டோபர் 11 புதன்கிழமை "Laudate Deum" என்ற சுற்றுமடல் வெளியிடப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வத்திக்கானிற்கு வரவேற்கப்பட்ட COP28 இன் தலைவர் முனைவர் சுல்தான் அல் ஜாபர் அவர்கள், திருத்தந்தையுடனான சந்திப்பிற்குப்பின் திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப்பிரிவு இயக்குனர் முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்களுடன் மேற்கொண்டக் கலந்துரையாடலின்போது இவ்வாறு கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொழில்துறை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சரும், COP28 இன் தலைவருமான முனைவர் சுல்தான் அல் ஜாபர் அவர்கள், நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெற உள்ள COP28 நிகழ்வின் நோக்கங்கள் மற்றும் உள்ளடக்கங்கள், திருத்தந்தையின் “Laudate Deum” என்னும் காலநிலை நெருக்கடிக்கு விளக்கமளிக்கும் சுற்றுமடல் ஆகியவற்றைக் குறித்த தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
2030-க்குள் 22 ஜிகா டன்கள் வெப்ப உமிழ்வைக் குறைக்க வேண்டிய அதே நேரத்தில் நம்மைப் பாதிக்கும் பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும் என்றும் நியாயமான மற்றும் ஒழுங்கான ஆற்றல் மாற்றத்தை விரைவுபடுத்துதல், காலநிலை நிதியை ஆழப்படுத்துதல், மக்கள், இயற்கை, வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் கவனம் செலுத்துதல், முழு உள்ளடக்கத்துடன் இதை ஆதரித்தல் போன்றவற்றில் முனைப்புடன் செயல்படுவதாகவும் கூறினார் முனைவர் ஜாபர்.
காலநிலை நெருக்கடிக்கானத் தீர்வுகளை வழங்க உலகை ஒன்றிணைத்து ஒன்றாக செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று வலியுறுத்திய ஜாபர் அவர்கள், திருத்தந்தையின் சுற்றுமடலானது, காலநிலை மாற்றத்திற்கான நடவடிக்கையை அதிகரிக்க விடுக்கப்பட்ட அவசர அழைப்பு என்றும், நடைபெற இருக்கும் "COP28 ஆற்றல் மாற்றத்தின் தீர்க்கமான செயலுக்கு வழிவகுக்கும்" என்றும் கூறினார்.
கால நிலை மாற்றத்திற்காக செயல்படும் அமைப்புக்களை ஒன்றிணைத்தல், அதன் உள்ளடக்கிய தன்மையை உறுதிப்படுத்துதல், தெளிவான அர்ப்பணிப்பு மற்றும் செயல்களை அடைதல், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு காலநிலை நடவடிக்கைகளை வழங்குதல் போன்ற பணிகளில் முழுமையாக செயல்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறுதியான ஆதரவை வழங்க உறுதிஅளித்துள்ளதாகக் கூறினார் முனைவர் ஜாபர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்