தேடுதல்

உக்ரைன் பிரதமருடன் திருப்பீடச் செயலர் (தொகுப்பு படம் - 27.04.2023) உக்ரைன் பிரதமருடன் திருப்பீடச் செயலர் (தொகுப்பு படம் - 27.04.2023)  (ANSA)

உக்ரைன் நாடு அமைதியில் வாழ அதற்கு உரிமையுள்ளது

உக்ரைன் நாட்டின் அமைதிக்கு ஒரு வழியைத் தேடவேண்டியது உக்ரைன் நாட்டின் பொறுப்பு மட்டுமல்ல, அது அனைத்து நாடுகளின் கடமை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மோதல்களுக்குத் தீர்வு காண ஆயுதங்கள் உதவுவதில்லை, அனைத்துலக சட்டங்கள் முதலில் மதிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

மால்ட்டாவில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற அமைதி திட்ட கருத்தரங்கிற்கு காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பிய கர்தினால் பரோலின் அவர்கள், வன்முறைகள், அப்பாவி மக்களின் இறப்புக்கள், போர்க்கைதிகள் விடுவிக்கப்படாமை, குழந்தைகள் புலம்பெயர்தல் என்ற மனிதாபிமான நெருக்கடிகளுக்கு தீர்வுகண்டு, நீதியான ஒரு சமுதாயம் உருவாக உழைக்கும்போது மட்டுமே அமைதி நிலவும் என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அரசுத்தலைவரின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கான அமைதி திட்டம் ஒன்றை வரையறுப்பது குறித்து மால்டாவில் 65க்கும் மேற்பட்ட நாடுகள் கூடியிருந்த கருத்தரங்கிற்கு வத்திக்கானின் சார்பில் இந்த காணொளிச் செய்தியை அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

உக்ரைன் நாட்டின் அமைதிக்கு ஒரு வழியைத் தேடவேண்டியது உக்ரைன் நாட்டின் பொறுப்பு மட்டுமல்ல, அது அனைத்து நாடுகளின் கடமை என்பதையும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் பரோலின்.

உக்ரைன் நாடு தன் எல்லைகளை காத்துக் கொள்ளவும், தன் குடிமக்களுக்குரிய பாதுகாப்பை வழங்கவும், அமைதியில் வாழவும் அதற்குரிய உரிமையை எவரும் மறுக்க முடியாது எனக் கூறும் திருப்பீடச் செயலர், அனைத்துலகச் சட்டங்கள் மதிக்கப்பட தொடர்ந்து வலியுறுத்திவரும் திருப்பீடம், மனிதாபிமான விவகாரங்களுக்கு ஆதரவாக தன் குரலை தொடர்ந்து எழுப்பி வருவதாகவும், குறிப்பாக உணவு பாதுகாப்பு, இயற்கை சுற்றுச்சூழல் மதிக்கப்படல், போர்க்கைதிகளும் குழந்தைகளும் அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படல் போன்றவைகளுக்கு குரல் எழுப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2023, 14:19