தேடுதல்

 Laudate Deum என்ற திருத்தந்தையின் திருமடல் Laudate Deum என்ற திருத்தந்தையின் திருமடல் 

தாழ்ச்சி, ஒன்றிப்பு, செபம் மற்றும் பிறரன்பை கைக்கொள்வோம்

நற்செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன், நம் ஆதாரமாகிய இயேசுவை நோக்கி நாம் திரும்பிச் செல்லவேண்டிய தேவை நமக்கு எப்போதும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அக்டோபர் 4ஆம் தேதி சிறப்பிக்கப்பட்ட அசிசியின் புனித பிரான்சிஸ் விழாவையொட்டியும், அதே நாளில் துவக்கப்பட்ட ஆயர் மாமன்றக் கூட்டம் குறித்தும், அக்டோபர் 4ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட Laudate Deum  சுற்றுமடல் தொடர்பாகவும் ஆறு டுவிட்டர் செய்திகளை புதன்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போராட்டங்களும் பிரிவினைகளும் இடம்பெற்ற காலத்தில் வாழ்ந்த புனித பிரான்சிஸ் அசிசி, யாரையும் குறை சொல்லவில்லை, யார் மீதும் கடின வார்த்தைகளை பயன்படுத்தவில்லை, மாறாக, நற்செய்தியின் ஆயுதங்களான தாழ்ச்சி, ஒன்றிப்பு, செபம் மற்றும் பிறரன்பை மட்டும் அவர் கைக்கொண்டு செயல்பட்டார், அவரைப்போல் நாமும் செயல்படுவோம் என தன் முதல் டுவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சரி செய்யப்படல், மற்றும் புனிதப்படுத்துதல் அன்னையாம் திருஅவைக்கு எப்போதும் தேவைப்படுகிறது, ஏனெனில், நாம் அனைவரும் மன்னிப்புப் பெற்ற பாவிகளால் உருவாக்கப்பட்ட இறைமக்கள் கூட்டம், நற்செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் நம் ஆதாரமாகிய இயேசுவை நோக்கி நாம் திரும்பிச் செல்லவேண்டிய தேவை நமக்கு எப்போதும் உள்ளது என திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தி உரைக்கிறது.

ஆயர் மாமன்றத்தின் முதல் பணி குறித்து தன் மூன்றாவது டுவிட்டரிலும்,  இயேசுவின் கனிவானப் பார்வையுடன் நாம் ஒன்றிணைந்து நடைபோட வேண்டியது குறித்து நான்காவது டுவிட்டரிலும், கடவுளின் இடத்தை நாம் எடுத்துக்கொள்ள முயலும்போது நமக்கு நாமே எதிரிகளாகிவிடுகிறோம் என தன் ஐந்தாவது டுவிட்டரிலும், இவ்வுலகை மேலும் அழகுள்ளதாக மாற்ற ஒப்புரவின் பாதையில் நடைபோடுவோம் என, அக்டோபர் 4ஆம் தேதியின் தன் இறுதி டுவிட்டரிலும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2023, 15:33