அமைதி தேடப்படாவிட்டால் உலகம் நெருக்கடிகளில் மூழ்கும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
உக்ரைன் மீதான இரஷ்ய தாக்குதல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எழுந்த ஒட்டுமொத்த உலக ஒழுங்கையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், இந்தப் போர் நிறுத்தப்படாவிட்டால், அமைதித் தேடப்படாவிட்டால், முழு உலகமும் இன்னும் ஆழமான நெருக்கடிகளில் மூழ்கும் சூழல் உள்ளது என்றும் கூறியுள்ளார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.
செப்டம்பர் 20 புதன்கிழமை நியுயார்க் நகரில் ‘‘ஐ.நாவின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை பயனுள்ள பலதரப்புவாதத்தின் வழியாக நிலைநிறுத்துதல்: உக்ரைனின் அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரித்தல்‘‘ என்னும் தலைப்பில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுவிவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.
இந்தப் போர் யாருக்கு எதிராக நடத்தப்படுகிறது என்ற கேள்வியை முன்வைத்த பேராயர் காலகர் அவர்கள், இப்போரினால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள், எளிய மக்கள், எல்லாவற்றுக்கும் மேலாக சிறார், இளையோர், மற்றும் முதியவர்கள் என்பது நாம் அனைவரும் காணும் வண்ணம் உள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
பெரிய தீமையை விளைவிக்கும் போர் தற்போது மேலும் மேலும் விரிவடைந்து, ஐரோப்பாவை மட்டுமல்லாது, பிற கண்டங்களையும் தனது அடர்ந்த நிழலால் மூடியுள்ளது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, மனித இதயங்களில் ஊடுருவி, அவற்றை போரின் வரையறைகள் மற்றும் அளவைகளைக் கொண்ட கொள்கலன்களாக மாற்றுகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் பேராயர் காலகர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிடுவதுபோல மூன்றாம் உலகப்போர் காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்றும், அமைதியை துண்டு துண்டாக்கும் ஒரு செயலாக போர் நடைபெறுகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் பேராயர் காலகர்.
அமைதி என்பது அதன் அம்சங்கள் மற்றும் பண்புகள் தெரியாத ஒரு உண்மை அல்ல என்றும், பன்னாட்டளவிலும், நிறுவன அளவிலும் மட்டுமின்றி, நம் சொந்த இதயங்களிலும், வீடுகளிலும் இதை நடைமுறைப்படுத்துவதற்கான பொதுவான உறுதிப்பாடு இருக்கும்போது அமைதி உறுதியாக நம்மில் வரும் என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் காலகர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்