வளங்களை வீணடிக்கும் அணுசக்தி பயன்பாடு
திமினா செலின் ராஜேந்திரன் - வத்திக்கான்
அணுசக்தி போரின் ஆபத்து இன்றைய தலைமுறைகளில் மிக அதிகமாக உள்ளது என்றும், அணுசக்தி பயன்பாட்டின் மனசாட்சியற்ற அச்சுறுத்தல்கள், தடையின்றி இயங்குகிற ஆயுதப் போட்டி ஆகியவை, மாநிலங்களின் வளங்களை வீணடிக்கின்றன என்றும் கூறியுள்ளார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.
செப்டம்பர் 26 செவ்வாய்க்கிழமை அணு ஆயுதங்கள் ஒழிப்பு உலக நாளை முன்னிட்டு நியுயார்கில் நடைபெற்ற ஐநா உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய போது இவ்வாறு கூறியுள்ளார் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.
அணு ஆயுதங்கள் மீதான வளர்ச்சிக் கவலைகளை அழுத்துகின்றது என்று கூறியுள்ள பேராயர் காலகர் அவர்கள், பன்னாட்டுப் பாதுகாப்பை ஆதரிக்கும் ஆயுதக் கட்டமைப்பைக் கைவிட்டு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அணு ஆயுத நாடுகள் அணுசக்தித் தடுப்பின் மீதான நம்பிக்கையை அதிகரித்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அணு ஆயுதங்களை முழுவதுமாக அகற்றுவதற்கான உறுதியான மற்றும் மனிதாபிமான கட்டாயத்தை வலியுறுத்துகிறார் என்பதை எடுத்துரைத்த பேராயர் காலகர் அவர்கள், அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான (TPNW) ஒப்பந்தம், வியன்னா செயல்திட்டத்தின் சரிபார்ப்பு, நேர்மறையான கடமைகளை மேம்படுத்துவதற்கான மாநிலக் கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஆகியவற்றை ஒப்புக் கொள்ளும் வத்திக்கானின் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அணுசக்தித் தடுப்பை நம்பியிருக்கும் மாநிலங்கள் அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளை மறுசீரமைக்கவும், இருதரப்பு ஆயுதக் கட்டுப்பாட்டு செயல்முறைகளின் மறுமலர்ச்சி, விரிவான அணு-சோதனை தடை ஒப்பந்தம், எதிர்மறை பாதுகாப்பு உத்தரவாதங்கள் மீதான ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் ஆகிய முயற்சிகளில் பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் காலகர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்