உக்ரைன் சிறாரை திரும்ப அழைத்து வர முயற்சி
மெரினா ராஜ் – வத்திக்கான்
உக்ரைனிய குழந்தைகளை அவரவர் வீட்டிற்கு திரும்ப அழைத்து வர முயற்சிப்போம் என்றும், போருக்கான தீர்வுகள் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வதற்கான திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் மத்தேயோ ஷூப்பி.
ஜூலை 4 செவ்வாய்க்கிழமை உரோமில் உள்ள Sant'Egidio தலைமையகத்தில் நடைபெற்ற Andrea Riccardi அவர்களின் அமைதியின் அழுகை என்ற ("The cry of peace") புத்தகத்தின் விளக்கக்காட்சியில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களுக்கு பதிலளித்த போது இவ்வாறு கூறினார் இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் மத்தேயோ ஷூப்பி.
போரை ஒரு விளையாட்டாகப் பார்க்கும் பார்வை மாற்றப்பட வேண்டும், ஏனெனில் இது அதன் தவிர்க்கமுடியாத ஏற்றுக்கொள்ளலுக்கு வழிவகுக்கிறது என்றும், அமைதிக்கான செயல்பாடுகளைக் கண்டறிவதில் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் ஷூப்பி.
சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப, அவற்றை மீண்டும் உருவாக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம் என்றும் அரசியலில் ஆழமான சிந்தனைகள், பரந்த பார்வைகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு தேவை என்றும் வலியுறுத்தினார் கர்தினால் ஷூப்பி.
இரண்டாம் உலகப் போர், ஷோவா போன்ற வரலாற்றையும் நினைவாற்றலையும் மீட்டெடுப்பது அவசியம் என்று எடுத்துரைத்த கர்தினால் ஷூப்பி அவர்கள், அமைதி கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும், இந்த கலாச்சாரம் மக்களிடையே பரவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கியேவ் மற்றும் மாஸ்கோவில் தனது பணிகளின் முடிவைப் பற்றி எடுத்துரைத்த அவர், மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் சிறாருக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கான செயல்பாடுகளாக மனிதாபிமான உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
மிகவும் பலவீனமான சிறாரிடமிருந்து தொடங்கும் இப்பணி உக்ரைன் சிறாரை மீண்டும் சொந்த நாட்டிற்குக் கொண்டு வருதல், புதிய வாழ்வை வழங்குதல் பற்றிய பணிகளில் தீவீரமடையவேண்டும் என்றும் போருக்கான தீர்வுகள் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வதற்கான திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் ஷூப்பி.
புத்தக விளக்கக்காட்சியின் போது, அமைதி என்றால் என்ன என்பதைப் பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று கூறிய அந்திரேயா ரிக்கார்டி அவர்கள், இரண்டாம் உலகப் போரின் காலாட்படை வீரர் கூறியது போல், நிலத்தில் வீழ்ந்து தோல்வியைத்தரும் போர் அசிங்கமானது என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்