தேடுதல்

பேராயர் பால் ரிச்சர்டு காலகர். பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.  (DRB)

நம்பிக்கையின் மரமாக விளங்கும் மங்கோலிய தலத்திருஅவை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ள இருக்கும் மங்கோலிய நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் முன்னேற்பாட்டு நடவடிக்கையாக பேராயர் காலகர் அவர்களின் பயணம் அமைந்திருந்தது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மங்கோலியக் கத்தோலிக்கர்கள் எண்ணிக்கையில் சிறியதாக கடுகு விதை போல இருந்தாலும் இறைநம்பிக்கையில் வளர்ந்து நிழலையும் பாதுகாப்பையும் தரும் அற்புதமான மரமாக, கடவுளின் மிகப்பெரிய செயல்களை நிறைவேற்றுகின்றார்கள் என்றும், தாழ்மையான மற்றும் எளிமையான செயல்களில் கடவுள் பணியை ஆற்றுகின்றார்கள் என்றும் கூறியுள்ளார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

கடந்த வாரம் ஜூன் 4 ஞாயிற்றுக்கிழமை முதல் 8 வியாழன் வரை கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவிற்கு பயணம் மேற்கொண்ட பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், மங்கோலிய மறைப்பணியாளர்களுடன் இணைந்து சிறப்பித்த திருப்பலியின் போது இவ்வாறு கூறியுள்ளார்.

மங்கோலியாவிற்கும் வத்திக்கானுக்கும் இடையிலான திருப்பீட உறவுகளின் 30வது ஆண்டு நிறைவையொட்டி, மங்கோலியாவிற்கு  சென்ற பேராயர் காலகர் அவர்கள், திருப்பீடத்தூதர், பன்னாட்டு உறவுகளமைப்பின் உறுப்பினர்கள், கத்தோலிக்கத்தலைவர்கள், அரசுத்தலைவர்கள் ஆகியோரை சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.

திருத்தூதர்கள் புனித பேதுரு மற்றும் பவுல் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய பேராயர் காலகர் அவர்கள், மறைப்பணியாளர்களின் அசைக்க முடியாத மற்றும் ஆழமான நம்பிக்கையின் சாட்சி, நற்செய்திப்பணியில் அவர்களது அர்ப்பணம், நம்பிக்கை, நன்மையின் எடுத்துக்காட்டுகள் ஆகியவற்றையும் சுட்டிக்காட்டினார்.

ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வியாழன் முதல் செப்டம்பர் 4  திங்கள் வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ள இருக்கும் மங்கோலிய நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் முன்னேற்பாட்டு நடவடிக்கையாகவும், மங்கோலிய கத்தோலிக்க தலத்திருஅவையின் வாழ்க்கை, முன்னேற்றம், மற்றும் மறைப்பணியாளர்களின் செயல்பாடுகள் போன்றவற்றைப் பற்றிய புரிதலுக்கான அடையாளமாகவும் பேராயர் காலகர் அவர்களின் இப்பயணம் அமைந்திருந்தது.

அழகான நிலப்பரப்புக்களை உடைய மங்கோலியாவிற்கும், அதில் வாழும் மக்களின் வாழ்விற்கும் திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் முக்கியமானதாக இருக்கும் என்றும், ஒற்றுமை, இணைந்து செயல்படுதல், இணக்கமான உறவு ஆகியவற்றில் நன்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், பல்சமய உரையாடலுக்கு வழிவகுக்கும்  என்றும் கூறியுள்ளார் பேராயர் காலகர்.  

கடந்த முப்பது ஆண்டுகளில் மங்கோலியாவின் பொருளாதார வளர்ச்சி, 1992ஆம் ஆண்டில் துவங்கிய திருப்பீடத்துடனான இணைப்பு, உறவுகள், எதிர்காலத்திற்கான வாய்ப்புகள், கலாச்சார மற்றும் சமூகத் துறைகளில் ஒத்துழைப்பு, கத்தோலிக்க திருஅவை மங்கோலிய சமுதாயத்திற்கு அளிக்கும் பங்களிப்பு, இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி, மங்கோலியாவில் உள்ள கத்தோலிக்க மறைப்பணியாளர்களின்  வாழ்க்கை மற்றும் பணி நிலைமைகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினார் பேராயர் காலகர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2023, 14:07