பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பின் புதிய பொதுச் செயலாளர் Alistair
மெரினா ராஜ் – வத்திக்கான்
காரித்தாஸ்க்குப் பணியாற்றுவது ஒரு பெரிய வரம் என்றும் வீடு, குடும்பம், தொழில் என எல்லாமாக காரித்தாஸ் அமைப்பைப் பார்ப்பதாகவும் கூறினார் பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பின் புதிய செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அலிஸ்டர் டட்டன்.
மே 15 திங்கள் கிழமை வெளியிடப்பட்ட காரித்தாஸ் அமைப்பின் அறிக்கையில் பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பின் 11ஆவது புதிய செயலாளராக அலிஸ்டர் டட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில் வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு பதிலளித்தார் டட்டன்.
162 தேசிய உறுப்பினர் அமைப்புகளை உள்ளடக்கிய காரித்தாஸ் கூட்டமைப்பிற்கு 2027 வரை டட்டன் தலைமை தாங்குவார் என்றும், கத்தோலிக்கத் திருஅவையின் மனிதாபிமான மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் புதிய தலைவராக டோக்கியோவின் பேராயர் டார்சிசியோ ஐசாவோ கிகுச்சி பொறுப்பேற்று செயல்படுவார் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
ஸ்காட்லாந்து காரித்தாஸ் அமைப்பின் (SCIAF) நிர்வாக இயக்குனராகப் பணியாற்றிவரும் டட்டன் அவர்கள், 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் காரித்தாஸ் அமைப்பின் திட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர் மற்றும் மனிதாபிமான துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். 2009 முதல் 2014 வரை, அவர் பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பின் மனிதாபிமான இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாழ்மையுடன் செவிமடுத்தல், சிந்தனையுடன் செயல்படுதல், உறவின் பாலங்களை அமைத்தல், கூட்டமைப்பை ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்லல் போன்றவற்றைச் செய்வதாகப் பொதுக்கூட்டத்தில் உறுதியளித்த டட்டன் அவர்கள், 2014-ஆம் ஆண்டில் பன்னாட்டு மனிதாபிமான தரநிலை அமைப்பான ஸ்பியர் திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், 2005 முதல் 2009 வரை ஆப்ரிக்காவுக்கான கிறிஸ்தவ உதவி மனிதாபிமான திட்டப் பிரிவின் தலைவராகவும் இருந்தவர்.
புதிய துணைத் தலைவர்
பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பின் புதிய துணைத் தலைவராக கிறிஸ்டி இராபர்ட்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 -ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா காரித்தாஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வரும், இராபர்ட்சன் அவர்கள், ஆஸ்திரேலிய காரித்தாஸ் அமைப்பில் நடைபெற்ற பசிபிக் நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளராகவும் செய்தித்தொடர்புக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்