தேடுதல்

கௌதம புத்தர் கௌதம புத்தர்  

இவ்வுலகிற்கு கருணையுடன்கூடிய சுயநலமற்ற அன்பின் தேவை

திருப்பீடத்தின் வைசாக் வாழ்த்து - துயர்களாலும் காயங்களாலும் வாடும் மனித சமுதாயம் உள்ளொளி புதுப்பித்தலின் துணையுடன் அவைகளை அணுகட்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகெங்கிலும் உள்ள புத்த மதத்தினர் மே மற்றும் ஜூன் மாதங்களில் முழு நிலவு நாளுக்கு அருகேயுள்ள ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பிக்கும் வைசாக் திருவிழாவையொட்டி வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

உலகின் சில இடங்களில் மே மாதம் 4ஆம் தேதி, 5 ஆம் தேதி அல்லது 6ஆம் தேதியும், சில இடங்களில் ஜூன் 2 அல்லது 4ஆம் தேதியும் சிறப்பிக்கப்படும் கௌதம புத்தரின் பிறந்த நாள், அவர் உள்ளொளி பெற்ற நாள் மற்றும் அவரின் இறப்பை சிறப்பிக்கும் விதமான இந்த வைசாக் பெருவிழாவுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள திருப்பீடத்தின் பிறமத உறவுகளுக்கானத் துறை, உள்ளொளிக்கானத் தேடலில் அனைத்து மக்களுக்கும் இந்த விழா உதவட்டும் என அதில் தெரிவித்துள்ளது.

துயர்களாலும் காயங்களாலும் வாடும் மனித சமுதாயம் உள்ளொளி புதுப்பித்தலின் துணையுடன் அவைகளை அணுகட்டும் என வாழ்த்தும் திருப்பீடத்துறை, ஏழ்மை, பாகுபாட்டு நிலை, வன்முறை, பாராமுகம், அடிமைத்தனம், பகைமை, மத மற்றும் தேசிய தீவிரப்போக்கு, வாழ்வில் வெறுப்புப் போன்றவைகளின் விளைவுகளுக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வுகாண வேண்டிய தேவை உள்ளது என எடுத்துரைக்கிறது.

கருணையுடன் கூடிய குணப்படுத்தும் நடவடிக்கைகள், சுயநலமற்ற அன்பு போன்றவைகளின் உதவியோடு நமக்கு அடுத்திருப்பவர்களுக்கு நாம் உதவவேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டியுள்ள இச்செய்தி, அன்பே சரிநிகர்தன்மைகளை உருவாக்குகிறது, சுவர்களை உடைத்து இடைவெளிகளைக் குறைக்கிறது, குணப்படுத்தலை கொணர்கிறது என்ற கருத்து கிறிஸ்தவத்திலும் புத்த மதத்திலும் நிலவுவதை சுட்டிக் காட்டியுள்ளது.

மதங்களிடையே உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்களால் கையெழுத்திடப்பட்டுள்ள இச்செய்தி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நீதியான, அமைதி நிறைந்த, ஒன்றிப்புடன் கூடிய உலகை கட்டியெழுப்புவதில் உழைப்பதுடன், நம் பொது இல்லமாகிய உலகின் காயங்களை குணப்படுத்த நம் பங்களிப்பை வழங்குவோம் எனவும் விண்ணப்பிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2023, 14:36