உலக ஆயர்கள் மாமன்றத்தில் ஆயரல்லாதவர்கள் பங்கேற்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உலக ஆயர் மாமன்றக் கூட்டத்திற்கென நியமிக்கப்பட்ட 70 ஆயரல்லாத உறுப்பினர்கள் (அவர்களில் பாதி பேர் பெண்கள்), அக்டோபரில் நடைபெறவிருக்கும் 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் வாக்களிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையால் நேரடியாக நியமிக்கப்பட்ட இந்த 70 நபர்களில் பொதுநிலையினரும் அடங்குவர், அவர்களில் 50 விழுக்காட்டினர் பெண்கள், மற்றும் அவர்களில் பல இளைஞர்களும் அடங்குவர். 400-க்கும் மேற்பட்ட மொத்த பங்கேற்பாளர்களில் ஏறக்குறைய 370 வாக்களிக்கும் உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆயர் மாமன்றத்தில் 70 பேரும் வாக்களிக்கும் உரிமையை அனுபவிப்பார்கள் என்றும் உலக ஆயர்கள் மாமன்றச் செயலகம் கூறியுள்ளது.
இவை, 2021-ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களேத் தொடங்கிய ஆயர் மாமன்றத்தின் ஒருங்கிணைந்த பயணப் பாதைக்கு (Synodal) முத்திரை பதிப்பவைகளாக, ஏப்ரல் 26, இப்புதனன்று அவர் அறிமுகப்படுத்திய முக்கிய மாற்றங்கள் உள்ளன.
இந்த மாற்றங்களை உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர் கர்தினால் மாரியோ கிரெக் (Mario Grech) மற்றும் இம்மாமன்றத்தின் தொடர்பாளரான இயேசு சபை கர்தினால் ஜீன்-கிளாட் ஹோலெரிச் ஆகியோர் வழங்கிய வேளை, இது ஒரு புரட்சி அல்ல, ஆனால் ஒரு முக்கியமான மாற்றம் என்று ஏப்ரல் 26, இப்புதனன்று திருப்பீடச் செய்தித் தொடர்பக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில் ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஓசியானியாவில் நடைபெற்ற கண்டங்களின் பேரவைத் தலைவர்களுக்கு அனுப்பட்டுள்ள ஒரு கடிதத்தில் இந்தப் புதிய ஏற்பாடுகள் குறித்து அதே நாளில் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், தற்போதைய விதிமுறைகள் எதுவும் நீக்கம் செய்யப்படவில்லை என்றும், 2018-ஆம் ஆண்டின் அப்போஸ்தலிக்க சட்டவிதிகளான Episcopalis Communio-இன்படி ஏற்கனவே உலக ஆயர் மாமன்றத்தில் 'ஆயர் அல்லாதவர்கள்' பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் இக்கடிதம் தெரிவிக்கிறது.
ஆயரல்லாத 70 உறுப்பினர்கள், 7 அனைத்துலக ஆயர் பேரவை, மற்றும் கிழக்குக் கத்தோலிக்கத் தலத் திருஅவைகளின் முதுபெரும் தந்தையர்களின் பேரவை ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட 140 பேர் கொண்ட பட்டியலில் இருந்து திருத்தந்தையால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மேலும், இவர்கள் 70 பேரும் அருள்பணியாளர்கள், துறவு வாழ்வுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருள்சகோதரிகள், திருத்தொண்டர்கள் மற்றும் பொதுநிலை நம்பிக்கையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்றும், இனி உலக ஆயர்கள் மாமன்றம் பார்வையாளர்களை வைத்துக்கொள்ளாது என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்