தேடுதல்

கர்தினால் மைக்கிள் செர்னி கர்தினால் மைக்கிள் செர்னி 

அமைதிக்கு முயற்சியும் அர்ப்பணிப்பும் தேவை : கர்தினால் செர்னி

அனைத்து நாடுகளும் பேரழிவினை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற முக்கியமான படிப்பினையை திருத்தந்தை பிரான்சிஸ், 'அவனியில் அமைதி' என்ற திருமடலிலிருந்து எடுத்துக்காட்டுகிறார்: கர்தினால் செர்னி.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அமைதி என்பது, போர் இல்லாத சூழல் மட்டுமல்ல, மாறாக, "மக்களிடையே, தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே, சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே, நாடுகள் மற்றும் கண்டங்களுக்கு இடையே உறவுகளை ஒருங்கிணைப்பதன் விளைவாக ஏற்படுவதே அமைதி என்று குறிப்பிட்டுள்ளார் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி

ஏப்ரல் 11, 1963 அன்று, திருத்தந்தை புனித 23-ஆம் யோவான் அவர்கள், ‘அவனியில் அமைதி’ என்ற திருமடலை வெளியிட்டார். இதன் 60-ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஏப்ரல் 11, இச்செவ்வாயன்று, மத அறிவியலுக்கான நிறுவனம், எமிலியா ரோமக்னாவின் இறையியல் கழகம் மற்றும் யுனெஸ்கோவால் ஏற்பாடு செய்யப்பட்ட "அமைதியின் இறைவாக்கு மற்றும் கைவினைத்திறன்" என்ற நிகழ்வில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார் கர்தினால் செர்னி.

காலத்திற்கேற்ற அடையாளம்

‘அவனியில் அமைதி’ என்ற திருமடலில் இருந்து மூன்று முக்கிய பகுதிகளைக் குறித்து பேசிய கர்தினால் செர்னி அவர்கள், 'மனிதனின் ‘இதயத்திலிருந்து, சமூகத்தின் மறுபரிசீலனைக்கு' என்ற கருத்தின் அடிப்படையில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டபோது, ஏற்கனவே உலகப் போர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் முகங்களில் தற்போது அமைதிக்கான ஏக்கம் இருபதைக் காண முடிகிறது என்று கூறினார்.

மனிதகுலம் வளரவும், முழு வாழ்வில் செழிக்கவும் அமைதி அவசியம் என்று கருத்தியதன் விளைவாகத்தான் திருத்தந்தை புனித 23-ஆம் யோவான் அவர்கள், ‘அவனியில் அமைதி’ என்ற திருமடலை வெளியிட தீர்மானித்தார் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் செர்னி அவர்கள், அமைதி என்பது சமூக வாழ்க்கையுடன் மிகவும் தொடர்புடையது, என்றும், இதன் வழியாக ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் அவரது அடிப்படை மனித மாண்பை பற்றிய முழுமையான உணர்வைக் காணலாம் என்றும் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை பிரான்சிசின் படிப்பினைகள்

திருத்தந்தை புனித 23-ஆம் யோவானின் திருமடலைப் படித்ததில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, "திருஅவையின் சமூகக் கோட்பாட்டின் செயல்பாட்டை மையப்படுத்தி அதிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடம்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டதாக எடுத்துக்காட்டினார் கர்தினால் செர்னி.

இன்றைய புதிய சவால்களைக் கருத்தில்கொண்டு, ஒரே திருஅவையாக எம்மாதிரியான வழிகளை ஏற்றுக்கொள்வது என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  கல்வி அவசரத் தேவை, ஊடகங்களின் செல்வாக்கு, பூமியின் வளங்களை அணுகுதல், உயிரியல் ஆராய்ச்சி முடிவுகளின் நல்ல அல்லது கெட்ட பயன்பாடு, உலகப் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றைக் குறித்தும் 'அவனியில் அமைதி' என்ற திருமடலிலிருந்து அவர் வாதிடுகிறார் என்றும் குறிப்பிட்டார் கர்தினால் செர்னி.

புலம்பெயர்ந்தோர்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குடியேற்றம் தொடர்பான பிரச்சினை பற்றி பேசும்போது அமைதியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார் என்றும், புலம்பெயர்வோர் மற்றும் இடம்பெயர்வோர் அனைவருக்கும் மாண்புடன் கூடிய வரவேற்பை வழங்குவது மட்டும்போதாது, மாறாக அனைவருக்கும் அமைதி நிறைந்த உலகத்தை உருவாக்கித் தருவதில் அனைவருக்கும் இருக்கவேண்டிய கடமைகளையும் எடுத்துக்காட்டுகிறார் என்றும் விளக்கினார் கர்தினால் செர்னி.

மேலும், அனைத்து நாடுகளும் பேரழிவினை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற முக்கியமான படிப்பினையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அவனியில் அமைதி' என்ற திருமடலிலிருந்து எடுத்துக்காட்டுகிறார் என்றும் உரைத்தார் கர்தினால் செர்னி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஏப்ரல் 2023, 14:14