கலாச்சாரத்திற்கேற்ற நற்செய்திப்பணி - பேராயர் பிசிகெல்லா
மெரினா ராஜ் – வத்திக்கான்
மாறிவரும் கலாச்சாரத்திற்குள் நுழைவது, வரலாற்றை உருவாக்குவது எப்படி ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு தலத்திருஅவை தனது நற்செய்திப் பணியினை ஆற்றவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் பேராயர் ரீனோ பிசிகெல்லா.
ஏப்ரல் 25 செவ்வாய்க்கிழமை அயர்லாந்து Maynooth இல் உள்ள புனித பேட்ரிக் கல்லூரியில் இறையழைத்தல் மற்றும் நற்செய்தி அறிவித்தல் என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய போது இவ்வாறு கூறியுள்ளார் புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா
கலாச்சாரத்திற்குள் நுழைதல், வரலாற்றை உருவாக்குதல் ஆகிய இரண்டையும் மறந்துவிட்டால், தலத்திருஅவை தனது நற்செய்திப் பணியில் திறம்பட செயல்பட முடியாது என்றும், இரண்டு துருவங்களும் தனித்தனியாக இல்லை என்பதை உணர்ந்து வரலாற்றுடன் தொடர்ந்து இணைந்திருக்க, திருஅவையின் நற்செய்திப் பணியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிகழ்வுகளை நாம் காணவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் பிசிகெல்லா.
புதிய பாதைகளைக் கண்டறியவும், தூயஆவியின் செயல்பாட்டின் கீழ் அவற்றைப் பின்தொடரவும் நற்செய்தி அறிவிப்புப் பணிகள் நம்மைத் தூண்டுகின்றன என்றும், எல்லோராலும் எல்லா இடங்களிலும் எப்போதும் நம்பப்பட்டு வந்தது, வளர்ந்து வரும் புதிய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் பேராயர் பிசிகெல்லா.
உரையாடல், சந்திப்பு, மக்களிடையே பரிமாற்றம், தகவல் மற்றும் அறிவைப் பெறுவதற்கான வாய்ப்பை இணையம் பிரதிபலிக்கிறது என்று கூறிய பேராயர் பிசிகெல்லா அவர்கள், பணி இல்லாமல், திருஅவை இல்லை என்பதை உணர்ந்து செயல்படவும் வலியுறுத்தியுள்ளார்.
பணி என்பது உண்மையை அறிவிப்பதாகும், இது காலத்தின் இறுதி வரை மாறும் வகையில் அப்படியே வைத்திருக்கும் பொறுப்பின் கீழ் வழங்கப்பட்டது என்று எடுத்துரைத்த பேராயர் பிசிகெல்லா அவர்கள், கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வழியாகக் கொண்டுவரப்பட்ட மீட்பின் அறிவிப்பு, நற்செய்தி அறிவிப்புப்பணி என்றும் கூறியுள்ளார்
இறைவனைத் தனிப்பட்ட விதத்தில் சந்தித்தல், பணியின் தேவையை உணர்தல், தூய ஆவியின் செயல்பாட்டை உணர்தல் போன்றவற்றின் வழியாக இறைவனின் ஊழியர்களாகத் தொடர்ந்து செயல்பட அழைக்கப்படுகின்றோம் என்றும் இறைவனின் திருஅவையின் ஊழியராக இருக்கவேண்டும் என்ற எண்ணம், நம்மீது பொழியப்பட்ட தூய ஆவியின் வல்லமையால் நிறைவேற்றப்பட்ட பணி ஆகிய இரண்டையும் இரு தூண்களாகக் கொண்டு செயல்படவும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் பிசிகெல்லா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்