தேடுதல்

ஆயர் மாமன்றத்தின் போது.. ஆயர் மாமன்றத்தின் போது.. 

ஒருங்கிணைந்த பயணக்கூட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவு

ஒருங்கிணைந்த பயணக் கூட்டத்தின் பணியில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்ட அனைவருக்கும் திருப்பீட ஆயர் பேரவையின் தலைமைச் செயலகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

2023 மார்ச் 31 வெள்ளிக்கிழமையுடன், கண்டங்களவில் நடந்த, சினோடல் என்னும் ஒருங்கிணைந்த பயணத்திற்கான செயல்முறையின் இரண்டாம் கட்டம் முடிவடைந்தது என்றும், ஆலோசனைக் கூட்டம் தான் முடிவுற்றிருக்கிறதேயன்றி இறைமக்களுடனான உரையாடல் முடிவடையவில்லை என்றும் ஆயர் பேரவையின் தலைமை செயலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1, சனிக்கிழமை, அனைத்துலக ஆயர் பேரவையின் தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள நிலையில், கண்டங்களளவில் நடைபெற்ற அனைத்து கூட்டங்களும் கிறிஸ்துவுடன் ஒற்றுமையாக நடப்பதன் வழியாகப் புதுப்பித்தலுக்கான பெரும் விருப்பத்தை வலியுறுத்தியுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த பயணச் செயல்பாடுகள் ஆழமான மகிழ்ச்சியையும் நம்பிக்கையுள்ள மக்களின் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கையில், இறைமக்கள் ஆலயம் என்பது செவிமடுக்கும் ஒரு கருவியாகவும், திருஅவை வாழ்க்கையின் நிரந்தர இயக்கமாகவும் இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருமித்த கருத்தை அடைதல், உண்மையாகக் கேட்டல், சமூகப் பகுத்தறிவை வளர்த்தல் போன்றவற்றிற்கு "ஆன்மிக உரையாடல்" முறையைத் தேர்ந்தெடுப்பதற்கான திருஅவை முடிவையும் இக்கூட்டங்கள் உறுதிப்படுத்தியுள்ளன என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பணியில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்ட அனைவருக்கும் ஆயர் பேரவையின் தலைமைச் செயலகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறது என்றும், குறிப்பிட்ட தலத்திருஅவைகள் மற்றும் உலகளாவிய தலத்திருஅவைகளுக்கு இடையேயான உரையாடலை வலுப்படுத்தி, ஒற்றுமையாக ஒன்றிணைந்து நடப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய அதிக விழிப்புணர்வுக்கு இக்கூட்டங்கள் வழிவகுத்துள்ளன என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஏழு கண்டத்தில் நடைபெற்ற கூட்டங்கள், செவிமடுத்தல் மற்றும் பகுத்தறிதலுக்கான ஓர் உண்மையான செயல்முறையாக இருந்தன என்றும், ஒன்றிணைந்து நடப்பது' எப்படி என்பதையும், ஒப்படைக்கப்பட்ட பணிக்கு ஏற்ப நற்செய்தியை அறிவிப்பது எப்படி என்பதையும் திருஅவை மக்களுக்கு வெளிப்படுத்தி பல்வேறு வகைகளில் உதவுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 April 2023, 13:22