தேடுதல்

ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் Fortunatus Nwachukwu. ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் Fortunatus Nwachukwu.  (Vatican Media)

மத நம்பிக்கைகளுக்காக சித்ரவதைகளை அனுபவிப்பது தொடர்கிறது

வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுவது, மதத்தலைவர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது போன்றவை அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தங்கள் மத நம்பிக்கைகளின் காரணமாக இன்றைய உலகில் எண்ணற்ற தனியார்களும் சமுதாயங்களும் துன்பங்களை அனுபவித்துவரும் நிலையில் மத விடுதலை அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது அமைதிக்கு இன்றியமையாதது என ஐ,நா.வின் மனித உரிமைகள் அமைப்பில் உரையாற்றினார் ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் Fortunatus Nwachukwu.

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் 52வது கூட்டத்தொடரில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய பேராயர், பல நாடுகளில் மக்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக சித்ரவதைகளை அனுபவிப்பதையும், மத சுதந்திரம் கட்டுப்படுத்தப்படிருப்பதையும் காண்கிறோம் என்றும், உலகின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இத்தகைய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுவது, மதத்தலைவர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது போன்றவை அண்மைக்காலங்களில் அதிகரித்து அது ஒரு பொதுவான நிகழ்வுபோல் தோற்றம் தரப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

அண்மை புள்ளிவிவரங்களின்படி, உலகின் ஒவ்வொரு 7 கிறிஸ்தவர்களுள் ஒருவர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்ற செய்தியையும் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் எடுத்துரைத்தார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Nwachukwu.

பல நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் அதிகரித்துவருவது கவலைதருவதாக உள்ளது என்ற பேராயர், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசுகளின் கடமைகள் நிறைவேற்றப்படவேண்டும், ஏனெனில், இது பொது நலனை நோக்கியப் பாதை எனவும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2023, 15:08