விண்வெளியிலிருந்து திருத்தந்தையின் நம்பிக்கையின் வார்த்தைகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கோவிட் பெருந்தொற்று மிகத்தீவிரமாக இருந்த காலத்தில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி புனித பேதுரு பேராலய வளாகத்தில் மழைத்தூறலில் நனைந்து கொண்டே, தன்னந்தனியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக மக்களுக்காக செபித்ததும், ஆசீர் வழங்கியதும் அடங்கிய மிகச்சிறிய சிலிக்கன் தகடு, விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள Vandenberg விண்வெளி நிலையத்திலிருந்து ஏவுகலம் வழியாக அனுப்பப்பட உள்ள இந்த சிலிகன் தகடு அடங்கிய மிகச்சிறிய செயற்கைக்கோளுக்கு, Spei Satelles, அதாவது, நம்பிக்கையின் செயற்கைக்கோள் என பெயரிடப்பட்டுள்ளது.
நீ ஏன் அஞ்சுகிறாய் உனக்கு விசுவாசமில்லையா என மேல்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள இந்த தகடினுள், 2020 மார்ச் 27ல் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை கூறிய வார்த்தைகள் பதியப்பட்டிருக்கும். இது ஜூன் மாதம் 10ஆம் தேதி இத்தாலிய விண்வெளிக்கழகத்தின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு ஏவப்படும்.
இத்தாலியின் தூரின் நகர் பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட மிகச்சிறிய செயற்கை விண்வெளிக்கோள் வழியாக ஒலிபரப்பப்பட உள்ள, திருத்தந்தையின் வார்த்தைகள் அடங்கிய இந்த சிலிக்கன் தகடு, வத்திக்கான் சமூகத்தொடர்புத் துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 525 கிலோ மீட்டர் உயரத்தில் செயற்கைக்கோள் வழி திருத்தந்தையின் இவ்வார்த்தைகள் ஒலிபரப்பப்படுவதற்கு, தூரின் பல்கலைகழகம், வத்திக்கான் சமூகத்தொடர்புத்துறை, இத்தாலிய விண்வெளிக்கழகம், கலிபோர்னியா விண்வெளித்தளம் ஆகியவை உதவியுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்