தேடுதல்

la Civiltà Cattolica தலைமையகத்தில் கர்தினால் பரோலின் la Civiltà Cattolica தலைமையகத்தில் கர்தினால் பரோலின்  

உக்ரைனில் அமைதி ஏற்பட திருப்பீடம் அதிகம் முயற்சிக்கிறது

உக்ரைன் மற்றும் இரஷ்ய நாடுகளின் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்து உரையாடல்கள் நிகழ்த்தினால் மட்டுமே அமைதிக்கான பணிகள் அங்குத் தொடங்கப்பட முடியும் : கர்தினால் பியெத்ரோ பரோலின்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனில் அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் செயல்படுத்த படைப்புத்திறன் மிக்க அனைத்து  வழிகளிலும் நாங்கள் முயற்சிக்கிறோம் என்றும் முதல் படியாக அங்குப்  போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்  திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

“The Atlas of Francis. Vatican and International Politics" என்ற நூலை வழங்கும் விழாவின்போது la Civiltà Cattolica தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் இவ்வாறு வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் திருப்பீடம் மேற்கொண்டுவரும் அனைத்துவிதமான முயற்சிகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.

நம்பிக்கையின் அணுகுமுறை மற்றும் இரு தரப்பும் தொடர விரும்பும் உரையாடல் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ள  கர்தினால் பரோலின் அனைத்துலக திருஅவையின் இணைப்பைக் கொண்ட கத்தோலிக்கர்கள் அனைவரும் அதன் எண்ணங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார்.

திருப்பீடத்தின் பார்வை எப்போதும் வேறுபட்டது என்றும், அது உலகளாவிய பார்வை மற்றும் அமைதியைத் தேடுவதற்கான வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், உக்ரைன், இரஷ்ய ஆகிய இருநாடுகளின் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்து உரையாடல்கள் நிகழ்த்தினால் மட்டுமே அமைதிக்கான பணிகள் அங்குத் தொடங்கப்பட முடியும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2023, 14:00