தேடுதல்

திருத்தந்தையுடன் கர்தினால் Fortunatus Nwachukw (கோப்புப்படம் 2021) திருத்தந்தையுடன் கர்தினால் Fortunatus Nwachukw (கோப்புப்படம் 2021) 

அனைத்து நாடுகளும் அமைதிக்கான கருவிகளாகச் செயல்பட.....

நீடித்த அமைதியை உருவாக்கவும் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம் - பேராயர் Fortunatus Nwachukw

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலகிலுள்ள அனைவரும், அனைத்து நாடுகளும் அமைதியின் கருவிகளாக மாறுவதற்கும், பொறுப்பு மற்றும் பொதுவான ஒற்றுமை உணர்வுக்காக பணியாற்றுவதற்கும், அழைக்கப்படுகின்றோம் என்று கூறியுள்ளார் பேராயர் பொர்துனாதுஸ் நவ்சுக்.

மார்ச் 3 வெள்ளிக்கிழமையன்று ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் 52ஆவது அமர்வில் பங்கேற்றுப் பேசிய போது இவ்வாறுக் கூறியுள்ளார், அவ்வமைப்பிற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், பேராயர் பொர்துனாதுஸ் நவ்சுக்.

ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் அடித்தளத்தை வளர்க்கவும், நீடித்த அமைதியை உருவாக்கவும் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று வலியுறுத்தியுள்ள பேராயர் நவ்சுக் அவர்கள், வாழ்வதற்கான மனித உரிமை, மத சுதந்திரத்தைப் பாதுகாத்தல் என்பவற்றைப் பற்றியும் அக்கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார்.

உக்ரைனில் ஒரு வருடப் போருக்குப் பிறகு அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களால் மட்டுமல்லாது, ஆற்றல் மற்றும் உணவு உற்பத்தித் துறைகளிலும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர் என்று எடுத்துரைத்த பேராயர் நவ்சுக் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் மட்டுமே பாதுகாப்பின் ஒரே உறுதி என்றும் வலியுறுத்தியுள்ளார்.

புலம்பெயர்ந்தோரை மறக்காதீர்கள்

மோதல்கள், நிலையற்ற சமூக-அரசியல் தன்மைகள், இயற்கைப் பேரழிவுகள்" ஆகியவை இடம்பெயர்வுக்கான முதன்மைக் காரணங்கள் என்று திருஅவை வலியுறுத்துவதை அடிக்கோடிட்டுக் காட்டிய பேராயர், புலம்பெயர்வது எப்போதுமே எளிதான தேர்வாக இருக்காது என்றும், அடிக்கடி மக்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதனால் பாதுகாப்பற்ற பாதைகளில் தங்கள் இலக்குகளை கடினப்பட்டு அடைகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

"அவசரகால சூழ்நிலைகளில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது, பிறநாடுகளில் குடியேறுபவர்களின் ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பது இன்றியமையாதது என்றாலும், மக்கள் தங்கள் சொந்த நாடுகளில் அமைதியுடனும் பாதுகாப்புடனும் தங்குவதற்கான உரிமையை உறுதிப்படுத்த பலதரப்பு மட்டத்தில் ஒத்துழைப்பதும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார் .

வாழ்வதற்கான உரிமை அதன் அனைத்து வடிவங்களிலும் ஊக்குவிக்கப்படவேண்டும் என்றும், மற்றொரு மனிதனின் உயிருக்கு யாரும் உரிமை கோர முடியாது என்றும் எடுத்துரைத்துள்ள பேராயர் நவ்சுக் , திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வலியுறுத்துவது போல மத சுதந்திரத்தை வெறுமனே வழிபாட்டு சுதந்திரமாக குறைக்காது, மாண்புள்ள வாழ்க்கைக்கான குறைந்தபட்ச தேவைகளில் ஒன்றாகக் கருதவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2023, 13:01