தேடுதல்

கீழை வழிபாட்டுமுறை திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் Claudio Gugerotti  கீழை வழிபாட்டுமுறை திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் Claudio Gugerotti  

மத்தியக்கிழக்கு திருஅவைகளுக்கு புனித வெள்ளி நிதி திரட்டல்

மத்தியக்கிழக்குப் பகுதி திருஅவைகளுக்கென கடந்த ஆண்டு உலகம் முழுவதும் புனித வெள்ளியன்று திரட்டப்பட்ட நிதி, 90 இலட்சத்து 43 ஆயிரத்து 319 அமெரிக்க டாலர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பல ஆண்டுகளாக உள்நாட்டு மோதல்களால் பல்வேறுப் பிரச்சனைகளை எதிர்நோக்கிவரும் மத்தியக்கிழக்குப் பகுதி, அண்மை நிலநடுக்கத்தால் மேலும் பெருமளவு துன்பங்களை அனுபவித்து வருவதாக தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் திருப்பீட உயர் அதிகாரி, பேராயர் Claudio Gugerotti.

மத்தியக்கிழக்குப் பகுதிகளில் துன்புறும் திருஅவைகளுக்கு உதவும் நோக்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளியன்று உலகின் அனைத்துக் கோவில்களிலும் நிதி திரட்டப்படுவதையொட்டி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள, கீழை வழிபாட்டுமுறை திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் Gugerotti அவர்கள்,  அண்மை நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலத்திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

சிரியா மற்றும் தென் துருக்கியில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புகலிடம் கொடுத்து, கோவில்களையும் திருஅவைக் கட்டிடங்களையும் செபம் மற்றும் பிறரன்பின் தலங்களாக மாற்றியுள்ள பிரான்சிஸ்கன் சபையினரையும் ஏனைய சபையினரையும் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார் பேராயர்.

கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கான திருப்பீடத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டு உலகம் முழுவதும் புனித வெள்ளியன்று திரட்டப்பட்ட நிதி, 90 இலட்சத்து 43 ஆயிரத்து 319 அமெரிக்க டாலர் என தெரிய வந்துள்ளது.

இது கீழை வழிபாட்டுமுறை திருப்பீடத்துறையின் கீழ் இருக்கும் குருத்துவ மாணவர்கள், மற்றும் அருள்பணியாளர்களின் பயிற்சிக்கெனவும், யெருசலேம், ஜோர்டான், ஈராக், லெபனான், துருக்கி, சிரியா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, மற்றும் எரிட்ரியாவின் தலத்திரு அவைகளின் சமுதாய மற்றும் பிறரன்புப் பணிகளுக்கு எனவும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 March 2023, 14:48