உணவுப் பாதுகாப்பின்மை மிக முக்கியமான பிரச்சனை
மெரினா ராஜ் - வத்திக்கான்
வறுமைக்கு எதிரான போராட்டம் பன்னாட்டு சமூகத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும், வளர்ச்சி குன்றிய நாடுகளில் வாழும் மக்களின் உணவுப் பாதுகாப்பின்மை பற்றிய பிரச்சினை மிகவும் முக்கியமானது என்றும், வலியுறுத்தியுள்ளார் பேரருள்திரு Eugene Nugent.
மார்ச் 5 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 9 வியாழன் வரை கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற, வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கான ஐந்தாவது ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய போது இவ்வாறு கூறியுள்ளார் திருப்பீடத்தின் சார்பில் அக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள்குழுவின் தலைவரான பேரருள்திரு Nugent.
அனைவருக்கும் போதுமான உணவு உற்பத்தி செய்யப்படும் வேளையிலும், உணவு பற்றாக்குறையினால் இலட்சக்கணக்கான மக்கள் பசியால் அவதிப்பட்டு அன்றாடம் இறப்பது உண்மையாகவே உள்ளது என்றும், உலகச் சந்தையில் விலையேற்றம் மற்றும் இறக்கத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கும், தவிர்க்க முடியாதபோது அதன் விளைவுகளைத் தணிப்பதற்கும் பன்னாட்டு சமூகம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளார் பேரருள்திரு Nugent.
2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் "சொந்த எல்லையில் மாண்புள்ள முகவர்களான ஏழைகள்” என்று கூறியதை நினைவுகூர்ந்த பேராயர் Nugent, வளர்ச்சி குர்றைந்த நாடுகளில் உள்ள அனைத்து பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள், பன்னாட்டு சமூகம் தங்களை ஆதரிக்கவும் முழு திறனுடன் அச்சமூகத்தில் பங்கேற்கவும் கடினமான சவால்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு சமூகத்திற்கு வறுமையில் வாழும் மக்களின் நிலை பற்றி எடுத்துரைக்கும் ஒரு முக்கியமான வாய்ப்பாக, வரையறுக்கப்பட்ட ஒரு நிகழ்வாக இக்கூட்டம் அமைந்ததாகவும், இதனால் ஏழ்மையான நாடுகளுக்கு அவர்களின் நிலையான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கிய பாதையில் உதவுவதற்கான முயற்சிகளை எதிர்காலத்தில் இணைக்க முடியும் என்றும் எடுத்துரைத்துள்ளார் பேரருள்திரு Nugent
உலகில் ஏழைகள் அதிகரிப்பு
வளர்ச்சி குன்றிய நாடுகளில் உள்ள 88 கோடி மக்கள் தொகையின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தீவிர வறுமையில் அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும், கோவிட்-19 பெருந்தொற்றுநோயின் தொடக்கத்தில் இருந்ததை விட 3 கோடியே 20 இலட்சம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ள பேரருள்திரு Nugent அவர்கள், பொருளாதாரத்தில் மட்டுமல்ல, கல்வி, பாதுகாப்பு, போதுமான உணவு, குடிநீர், மின்சாரம் ஆகியவற்றைப் பெறுவதிலும் வறுமை நிலையில் இருப்பதை எடுத்துரைத்துள்ளார்.
நியாயமான வர்த்தகத்தை ஊக்குவிக்கவும்
வளர்ச்சி குன்றிய நாடுகளின் முழு வணிகத் திறன் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை" என்று எடுத்துரைத்த பேரருள்திரு Nugent அவர்கள், உலகப் பொருளாதார அமைப்பு, நியாயமான முறையில் வரையறுக்கக்கூடிய ஒரு வர்த்தகமாக செயல்பட வேண்டும் என்றும், பன்னாட்டுப் பொருளாதார உறவுகளின் அடிப்படையில் பொது நலனைப் பின்தொடர்வது, பொருட்களின் உலகளாவிய இலக்கு, வர்த்தகத்தின் நேர்மை, உரிமைகள், கவனிப்பு, மிகவும் நியாயமான வருமானம், விற்பனை ஆகியவற்றில், மிகவும் ஏழைகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பொருளாதாரக் கொள்கைகள், ஒன்றும் இல்லாதவர்களுக்கும் எல்லாம் இருப்பவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை எவ்வாறு குறைக்கிறது என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய பேரருள்திரு Nugent அவர்கள் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினை மிகவும் முக்கியமானது, இது ஏழ்மையான நாடுகளில் 2கோடியே 51 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதிக்கிறது என்றும், "ஒரு முரண்பாடான எதார்த்தம் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்