பாலியல் வன்முறை 'மனிதகுலத்தின் அழிவு' Paolo Ruffini
மெரினா ராஜ் – வத்திக்கான்
மனிதகுலத்தை அழிக்கும் ஆயுதமாக பாலியல் வன்முறை மாறியுள்ளது" என்றும் ஐரோப்பாவிற்கு வரும் பெரும்பாலான பெண் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் அதிகமாக பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள் என்றும் கூறினார் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறைத் தலைவர் Paolo Ruffini
மார்ச் 24 வெள்ளிக்கிழமை கத்தோலிக்க பெண்கள் அமைப்புகளின் உலக ஒன்றியம் மற்றும் திருப்பீடத்திற்கான இங்கிலாந்து தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, பாலியல் வன்முறை பற்றிய குழு விவாதத்தில் பங்கேற்றுக் பேசுகையில் இவ்வாறு கூறிய Ruffini அவர்கள், உலகில் நடக்கும் தீமைகளில் நாமும் தொடர்பு கொண்டுள்ளோம் என்றும், நான் அங்கு இல்லை, எனக்குத் தெரியாது என்று சொல்ல முடியாத காலத்தில் நாம் வாழ்கிறோம் என்றும் எடுத்துரைத்தார்.
மனிதகுலத்தை அழிக்கும் ஆயுதமாக பாலியல் வன்முறை மாறியுள்ளது" என்று சுட்டிக்காட்டிய Ruffini அவர்கள், 2021 ஆம் ஆண்டில் 3,293 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஆனால் உண்மையான எண்ணிக்கை 35,000 முதல் 70,000 வரை இருக்கலாம் என ஐ நா கருதுவதாகவும் எடுத்துரைத்தார்.
ஐரோப்பாவிற்கு வரும் பெரும்பாலான பெண் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாலியல் வன்முறையை அனுபவித்ததாக எடுத்துரைத்த Ruffini அவர்கள், திருத்தந்தையின் காங்கோ ஜனநாயகக் குடியரசு திருத்தூதுப் பயணத்தின் போது அப்பெண்கள் அனுபவித்த வன்முறை இன்னும் என் இதயத்தில் எதிரொலிக்கின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.
மேலும், இரத்தத்தின் அழுகையை உங்கள் காதுகளைத் திறந்து கேளுங்கள் மனமாற்றத்திற்கு அழைக்கும் கடவுளின் குரலுக்கும், மனசாட்சியின் குரலுக்கும் செவிமடுங்கள். எப்போதும் வன்முறை வேண்டாம் என்ற திருத்தந்தையின் வரிகளையும் மேற்கோள்காட்டி கூறிய Ruffini அவர்கள், உலகில் தீமைகளை எதிர்கொள்ளும்போது, “இதில் கடவுள் எங்கே இருக்கிறார்?” என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வது இயற்கையானது என்றாலும், "நாம் எங்கே இருக்கிறோம்?" என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஏதேன் தோட்டத்தில், ஆதாமைப் போலவே நாமும் நம்மை மறைத்துக் கொள்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள உலகில் உள்ள பயங்கரமான உண்மைகளை நாம் புறக்கணிக்கிறோம் தவிர்க்க முடியாதவையாக ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறிய Ruffini அவர்கள், உலகின் தீமைகளுக்கு "நாம் அனைவரும் தொடர்பு கொண்டுள்ளோம். "நான் அங்கு இல்லை, எனக்குத் தெரியாது" என்று சொல்ல முடியாத காலத்தில் நாம் வாழ்கிறோம் என்றும் எடுத்துரைத்தார்.
மேலும், தீமையைப் பார்க்கத் தெரிந்துகொள்ளவும், அதை வேறுபடுத்தவும், கண்டிக்கவும், அதை ஏற்றுக்கொண்டு நன்மையின் சக்தியுடன் மாற்றியமைக்கத் தெரிந்த தனிநபர்களாக நாம் ஒவ்வொருவரும் மாறுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்
பாலியல் வன்முறையை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் மத நூல்களின் தீங்கு விளைவிக்கும் தவறான விளக்கங்களை அகற்றுதல், பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடி அவர்களின் துயர் துடைக்க உதவுதல், போன்றவற்றில் நம்பிக்கை கொண்ட தலைவர்களின் முக்கியமான பங்கினை வலியுறுத்தினார் இங்கிலாந்திற்கான திருப்பீடத்தூதர் Chris Trott.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்