தேடுதல்

Sacrofano குடியேற்றதாரர் பயிற்சி மையத்தில் கர்தினால் பரோலின் Sacrofano குடியேற்றதாரர் பயிற்சி மையத்தில் கர்தினால் பரோலின்  

பாதுகாப்பான குடியேற்றத்திற்கான விதிகள் உருவாக்கப்படவேண்டும்

வரவேற்பு, ஒருமைப்பாடு, அமைதியை ஊக்குவித்தல், உடன்பிறந்த உணர்வு போன்றவைகளுக்கு அர்ப்பணிக்க உதவும் புதிய குடியேற்றதார விதிகள் உருவாக்கப்பட வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கலாச்சாரங்களுக்கும் மதங்களுக்கும் இடையே உரையாடல் இடம்பெறுவதற்கு பெரும் உதவியாக குடியேற்றதாரர்கள் இருக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டதாக, குடியேற்றம் குறித்த விதிகள் பெருமளவில் தளர்த்தப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

உரோம் புறநகர் பகுதியில் Sacrofano என்னுமிடத்தில், இன்முக வரவேற்றலின் இருக்கை என்ற தலைப்பில் புதிய நிலையம் ஒன்றை திறந்து வைத்த நிகழ்வின்போது, பத்திரிகையாளர்களைச் சந்தித்த திருப்பீடச் செயலர், அண்மையில் தென் இத்தாலியின் Cutro நகர் அருகே குறைந்தபட்சம் 71 உயிர்களைப் பலிவாங்கிய படகு விபத்து குறித்த ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, பாதுகாப்பான குடியேற்றத்திற்கான விதிகள் உருவாக்கப்படவேண்டும் என அழைப்புவிடுத்தார்.

உரோம் மாவட்டத்தில் உள்ள Sacrofano குடியேற்றதாரர் பயிற்சி மையத்தில் மார்ச் 6 இத்திங்கள் முதல் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், வரவேற்பு, ஒருமைப்பாடு, அமைதியை ஊக்குவித்தல், உடன்பிறந்த உணர்வு போன்றவைகளுக்கு அர்ப்பணிக்க உதவும் புதிய குடியேற்றதார விதிகள் உருவாக்கப்படவேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தியை வாசித்தளித்தார்.   

நம்பிக்கையின் பயணங்கள் ஒரு நாளும் மரணத்தின் பயணமாக அமையக்கூடாது என்ற திருத்தந்தையின் விண்ணப்பதைச் சுட்டிக்காட்டிய திருப்பீடச் செயலர், குடியேற்றதாரர் குறித்த திருஅவையின் வழிகாட்டல்கள் பின்பற்றப்படவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார்.

குடியேற்றதரர்களாக வரும் மக்கள் குறித்த அச்சம் களையப்பட்டு, அவர்களை வரவேற்கும் மனநிலை வளரவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் கர்தினால் பரோலின்.

பிப்ரவரி 26ஆம் தேதி Cutroவில் இடம்பெற்ற படகு விபத்துபோல் மீண்டும் இடம்பெறாமல் இருக்க, குடியேற்றதாரர் குறித்த வரவேற்பு மனநிலையும், அவர்கள் குறித்த அச்ச அகற்றலும் இடம்பெறவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2023, 13:37