இரக்கம், அனைவரும் உடன்பிறந்தோர், பொதுவான இல்லம்...
மெரினா ராஜ் – வத்திக்கான்
காலத்தின் உறுதியான அடையாளமாகவும், இயேசுவின் மீட்பு நடவடிக்கையின் புனிதமாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பத்தாண்டு தலைமைத்துவப்பணி திகழ்கின்றது என்றும், இரக்கம், உடன்பிறந்த உணர்வு, பொதுவான இல்லம் ஆகியவை தலைமைத்துவப் பணியில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் எடுத்துரைத்தார் கர்தினால் மைக்கில் செர்னி.
மார்ச் 13ஆம் தேதி திங்கள்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பத்தாமாண்டை திருஅவை சிறப்பிக்க இருக்கின்ற வேளை, அது குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறினார் திருப்பீடத்தின் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி மேம்பாட்டுத்துறையின் தலைவரான, கர்தினால் மைக்கேல் செர்னி.
இன்று, படைப்பதில் அதிக கவனம் செலுத்துதல், மதங்களுக்கிடையேயான உரையாடல், அதிகமான ஒருங்கிணைந்த பயணக்கூட்டங்கள், அதிக இரக்கம் ஆகியவற்றில் திருஅவை பணிகள் வளர்ச்சி அடைந்துள்ளதாக எடுத்துரைத்த இயேசு சபையைச் சேர்ந்த கர்தினால் செர்னி அவர்கள், திருஅவை எவ்வாறு "ஏழைகள், பெண்கள், இடம்பெயர்ந்தோர் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களை உள்ளடக்கி அவர்களுக்காகப் பணியாற்றுகிறது" என்பது பற்றியும் விவரித்தார்.
திருத்தந்தையின் தலைமைத்துவப்பணி மற்றும் மேய்ப்புப்பணி, பற்றியக் கேள்விகளுக்கு, நல்ல சமாரியன், பொதுவான இல்லம் என்று சுருக்கமாக பதிலளித்த கர்தினால் செர்னி அவர்கள், சுருக்கமான பதில்களாக இருந்தாலும் அவைகள் எல்லா இடங்களிலும் மனித வாழ்க்கை மற்றும் மனித குடும்பத்தின் எதிர்காலம் குறித்து அக்கறை கொண்ட அனைத்துத் தலைவர்கள், விசுவாசிகள் மற்றும் நல்லெண்ணம் உள்ளவர்களுக்கான உறுதியான முன்னுதாரணங்கள் என்றும் எடுத்துரைத்தார்.
உரோமன் தலத்திருஅவை, பிரெதிகாத்தே எவாஞ்சலியம், மறைப்பணி இயல்பு ஆகியவை பற்றி எடுத்துரைத்த கர்தினால் செர்னி அவர்கள், தலத்திருஅவையின் பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியின் சவால்களை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவருக்கும் செவிசாய்ப்பதே தங்கள் முக்கிய பணி என்றும், தலத்திருஅவைகளுக்கு உதவுவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும், ஆக்கபூர்வமாக விமர்சித்து வளர்க்கவும் தயாராக இருக்கிறோம் என்றும் கூறினார் .
புலம்பெயர்ந்தோர், மனித கடத்தல், குடியேற்ற மையங்கள், வரவேற்பு, பாதுகாப்பு, பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த கர்தினால் செர்னி அவர்கள், உரையாடல், ஒருங்கிணைப்பு, ஆகியவற்றின் வழியாகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம் என்றும் கூறினார்.
திருத்தந்தையின் பத்தாண்டு சிறப்பான தலைமைத்துவப் பணிக்காக, தன் நன்றியினையும், முழு உலகத்தின் நன்றியின் அருளையும் செபத்தையும் திருத்தந்தை பெறவேண்டும் என்பது தனது உறுதியான விருப்பம் என்றும் தெரிவித்தார் கர்தினால் மைக்கில்செர்னி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்