அன்பே கடவுள் என்ற நற்செய்தியை அறிவிப்பவர்களாக...
மெரினா ராஜ் - வத்திக்கான்
"கடவுள் உன்னை அன்பு செய்கின்றார் என்ற நற்செய்தியை உலகிற்கு அறிவிக்கும் பணியை திருஅவைக் கொண்டுள்ளது என்றும், கடவுள் அன்பாகவே இருக்கின்றார் என்ற உண்மையை நமது நடைமுறைச் செயல்பாடுகளில் கடைபிடிப்பவர்களாக வாழ வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் Raniero Cantalamessa.
மார்ச் 17 வெள்ளிக்கிழமை தவக்காலத்தின் மூன்றாம் வார தியான சிந்தனைகளை அன்பே கடவுள் என்ற தலைப்பில், வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் வழங்கிய போது இவ்வாறு கூறினார் திருப்பீட உயர் அதிகாரிகளுக்கு தியான சிந்தனைகளை வழங்கிவரும் கர்தினால் Raniero Cantalamessa.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் பங்கேற்ற இத்தவக்கால சிந்தனையில் தமத்திரித்துவம், மனிதஉரு, பாடுகள், மரணம் ஆகியவைக் குறித்து எடுத்துரைத்த கர்தினால் Cantalamessa, நாம் கிறிஸ்துவின் துன்பத்தால் மீட்கப்படவில்லை, மாறாக அவருடைய அன்பினால் மீட்கப்பட்டோம் என்றும் எடுத்துரைத்தார்.
தமத்திரித்துவத்தின் தெய்வீக அன்பு
கடவுளால் நமக்குள் ஊற்றப்பட்ட அன்பானது, தந்தைக் கடவுள் மைந்தனாம் இயேசுவின் மேல் செலுத்திய அதே அன்பு என்று கூறிய கர்தினால் Cantalamessa, தமத்திரித்துவத்திலிருந்து நிரம்பி வழியும் தெய்வீக அன்பினால் கடவுள் நம் ஆன்மாவுடன் தொடர்பு கொள்கிறார், இதனால் தந்தை மகன் மீது கொண்ட அன்பு, மகன் தந்தை மீது கொண்ட அன்பை உணர தூய ஆவியானவர் நமக்கு உதவுகின்றார் என்றும் எடுத்துரைத்தார்.
கடவுள் அன்பின் அடையாளமான மனித உரு
மனிதர்களைப் பாவத்திலிருந்து மீட்க மனிதராக மனு உரு எடுத்த இயேசு மனிதன் தான் செய்த பாவத்தின் வழியாக கடவுளுடைய உடன்படிக்கைக்கு மாறாக நடந்ததை சுட்டிக்காட்ட மனிதகுலத்தின் அடையாளமாக, கடவுளின் எல்லையற்ற அன்பின் மதிப்பாக இவ்வுலகில் பிறந்தார், பணியாற்றினார் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Cantalamessa.
சிலுவை பாடுகள் மற்றும் மரணம்
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் அன்பு, அதன் அனைத்து மதிப்பையும் தக்க வைத்துள்ளது என்று சுட்டிக்காட்டிய கர்தினால் Cantalamessa, திருஅவை இதனை தியானிப்பதை ஒருபோதும் நிறுத்தாது என்றும் மீட்பின் காரணமாக அல்ல, மாறாக அன்பின் அடையாளமாகவும் சாட்சியமாகவும் “கடவுள் பாவிகளாகிய நம்மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்துகிறார் என்றும் கூறினார்.
கடவுளின் மீது நமக்குள்ள அன்பு, எதிரொலியாக நம்மீது மீண்டும் பொழியப்படுகின்றது என்றும், புதுமை மற்றும் நன்றியுணர்வின் அடையாளமாக, நற்கருணையில் அவ்வன்பு நிறைவேற்றப்படுகின்றது என்றும் எடுத்துரைத்த கர்தினால் Cantalamessa, கிறிஸ்தவ நம்பிக்கையின் சிறப்பாக கருதப்படும் கடவுளின் அன்பை உலக மக்கள் அனைவருக்கும் குறிப்பாக அன்பிற்காக காத்திருக்கும் மக்களுக்கு வழங்குபவர்களாக வாழ முயற்சிப்போம் என்றும் கூறினார்
பழைய ஏற்பாட்டில் ஈசாக் தன் இளையமகனுக்கு ஆசீர் வழங்கிய நிகழ்வை நினைவுகூர்ந்த கர்தினால் Cantalamessa, குரல் யாக்கோபினுடையது உடல் ஏசாவினுடையது என்று கூறி ஆசீர்வதித்தது போல, இன்று நம்மையும் ஆசீர்வதிப்பார் என்று கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்