தூயஆவியைப் பின்பற்றுவது என்பது புதுமைக்குத் திறந்திருப்பது
மெரினா ராஜ் – வத்திக்கான்
கிறிஸ்தவ அன்பின் பலம் என்பது அன்பில்லாத செயலில் உள்ள தீர்ப்பை அன்பின் செயலாக மாற்றும் திறன் கொண்டது என்றும் இத்தகைய ஆற்றலை அளிக்கும் தூய ஆவியைப் பின்பற்றுவது என்பது புதுமைக்கு நம் இதயங்களைத் திறப்பதாகும் என்றும் கூறினார் கர்தினால் Raniero Cantalamessa.
கடந்த பல ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் வெள்ளிக்கிழமைகளில் திருப்பீட உயர் அதிகாரிகளுக்கு தியான சிந்தனைகளை வழங்கிவரும் கர்தினால் Raniero Cantalamessa அவர்கள் மார்ச் 3 வெள்ளிக்கிழமை 2023 ஆம் ஆண்டு தவக்காலத்திற்கான முதல் சிந்தனையை தூயஆவியின் புதுமைத்தன்மை என்ற கருப்பொருளில் வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் வழங்கியபோது இவ்வாறு கூறினார்.
தூயஆவியின் புதுமைத்தன்மையினால் தனித்தனி நபரிலும், ஒட்டுமொத்த தலத்திருஅவையிலும் நிலையான புதுப்பித்தலை ஏற்படுத்தும் மாற்றத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அத்தகைய தூயஆவி நம் வாழ்வில் செயல்படுவதற்கு நன்றி கூற வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Cantalamessa.
புதுமையை, மாற்றத்தை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் Cantalamessa அவர்கள், “ஒவ்வொரு புதுமையும் மாற்றத்திற்கான குறுக்கு வழிகளாக உலகம் - கடவுள், சாவு - வாழ்வு என்னும் இரண்டு எதிரெதிரானப் பாதைகளைக் காட்டுகின்றது என்றும் எடுத்துரைத்தார்
திருஅவையில் ஒவ்வொரு வாழ்க்கை முறையும் ஒளியின் பாதையில் தவறாது செல்ல தூயஆவியானவர் வழிகாட்டுகின்றார் என்று எடுத்துரைத்த கர்தினால் Cantalamessa அவர்கள், திருஅவையின் முழு வாழ்க்கையின் இதயத்தில் தூயஆவியை வைக்க நம்மை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திருஅவை ஆரம்ப காலத்தில் தூயஆவியானவரால் பெரிய மற்றும் சிறிய விஷயங்களில் வழிநடத்தப்பட்டதை நினைவுகூர்ந்த கர்தினால் Cantalamessa, திருஅவையில் சரியான முடிவுகளை எடுப்பதற்கு ஆவியானவரை நோக்கி திரும்பும் இந்த முறை – புற இனமக்களை திருஅவையில் அனுமதிப்பது தொடர்பான பிரச்சினை, தன்னைப்புதுப்பித்தலில் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் முயற்சி, திருஅவையில் பொதுநிலையினரின் பங்கு போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதாக அமைந்துள்ளது என்று எடுத்துரைத்தார்.
திருஅவையில் உள்ள கேள்விகள் சினாட்கள் அல்லது ஆணைகளால் மட்டுமே தீர்க்கப்படுவதில்லை, மாறாக அக்கருத்துக்களை ஏற்றுக்கொள்வதன் வழியாக, சில சமயங்களில் தொடர்ச்சிக்கான விருப்பம் மற்றும் புதுமைக்கான விருப்பம் ஆகிய இரண்டிற்கும் இடையில் சமரசங்கள் தேவைப்படலாம் என்பதை கவனிக்க உதவுவதாகவும் எடுத்துரைத்தார்.
இரக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் மற்றவர்களை கண்டனத்துடன் நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, இரக்கத்துடன் செயல்படவேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் Cantalamessa, இதயத்திலிருந்து தீர்ப்பை அகற்றுவது அல்ல, மாறாக நமது தீர்ப்பில் இருக்கும் தீமையை அகற்றவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்