தேடுதல்

பேராயர் Justin Welby பேராயர் Justin Welby 

தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களிடம் மாற்றம் நிகழவேண்டும்

வன்முறையும் ஊழலுமற்ற ஒர் அமைதியான சூழலுக்குத் தெற்கு சூடான் மக்கள் அழைப்பு விடுகின்றனர் : பேராயர் Justin Welby

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருஅவை ஒன்றிணைந்து செயல்படுவது இயல்பானது என்பதை திருத்தந்தையின் இந்தத் திருத்தூதப் பயணம் மக்களுக்கு நினைவுபடுத்துகிறது என்று தான் நம்புவதாகவும், இது நமக்குத் தொடர்ந்து நினைவூட்டப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார் பேராயர் Justin Welby

பிப்ரவரி 5, இஞ்ஞாயிறன்று, தென்சூடானில் தனது திருத்தூதுப் பயணத்தை முடித்துக்கொண்டு உரோமைக்குத் திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்த Canterbury ஆங்கிலிக்கன் பேராயர் Justin Welby அவர்கள், ஒன்றிணைந்து நாம் மேற்கொள்ளும் இந்தப் திருப்பயணம் உலகம் முழுமைக்குமே ஓர் அடையாளமாக இருக்கின்றது என்றும் கூறினார்.

வன்முறையால் சிதைக்கப்பட்டுள்ள தென்சூடானுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து நீங்கள் மேற்கொண்ட இந்தத் திருத்தூதுப் பயணத்தின் நிறைவில், எம்மாதிரியான உணர்வுகளை இது உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்ற கேள்விக்குப் பதிலளித்த பேராயர் Welby அவர்கள், உள்ளத்தளவில் மனமாற்றம் நிகழவேண்டும் என்றும், இங்குள்ள திருஅவை மற்றும் துறவுக் குழுமங்களின் செயல்பாடுகள் நமக்குள் நிலவிய வேறுபாடுகளை உடைத்தெறிந்துள்ளது என்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பை உருவாக்கியுள்ளது என்றும் கூறினார்.

மேலும், தென்சூடானில், தலைமைப்பொறுப்பில் உள்ளவர்களின் இதயங்களில் மாற்றங்கள் நிகழவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் மற்றும் செபம் என்று கூறிய பேராயர் Welby அவர்கள், வன்முறையும் ஊழலுமற்ற ஒர் அமைதியான சூழலுக்குத் தென்சூடான் மக்கள் அழைப்பு விடுகின்றனர் என்றும், இவ்வமைதியை அந்நாட்டின் தலைவர்கள் அம்மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தார்.

கிறிஸ்தவர்கள் வெவ்வேறு திருச்சபைகளாக மற்றும் நம்பிக்கை கொண்டவர்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் கூட, அமைதி மற்றும் ஒப்புரவிற்காக ஒன்றிணைந்து செயல்பட இத்திருப்பயணம் புதியதொரு வழியை ஏற்படுத்துமா என்ற கேள்விக்குப் பதிலளித்த  பேராயர் Welby அவர்கள், ஒப்புரவிற்கான அனைத்து வழிகளையும் கடவுள் ஏற்படுத்தி இருக்கின்றார், ஆனால் மனிதரின் வீண்பெருமைதான் இது நிறைவேறவிடாமல் எதிர்க்கிறது என்று எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2023, 14:54