எழுத்து மற்றும் வழிபாட்டு சுதந்திரம் மதிக்கப்படவேண்டும்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வழிபாட்டுத் தலங்கள் மீதான அனைத்து தாக்குதல்களும் சிந்தனை, மனசாட்சி, மதம் அல்லது நம்பிக்கைக்கான உரிமை மற்றும் எழுத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார் வத்திக்கானின் திருப்பீடத்தூதர் Luciano Suriani
ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அவையினால் Skopje-யில் நடைபெற்ற மாநாட்டில், "OSCE பகுதியில் யூத எதிர்ப்புக்குத் தீர்வு காண்பது" என்ற தலைப்பில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த திருப்பீடத்தூதர் Suriani அவர்கள், ஐரோப்பாவில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு குறித்துத் திருப்பீடம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 7, இச்செவ்வாயன்று, நடைபெற்ற OSCE அவையின் இறுதி அமர்வில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருப்பீடத்தூதர் Suriani அவர்கள், யூத சமூகத்தின் தொழுகைக்கூடங்கள், யூத கல்லறைகள் மற்றும் பிற இடங்களைக் குறிவைத்து அதிகரித்து வரும் தாக்குதல்களால் திருப்பீடம் அதிகம் அச்சம் கொண்டுள்ளது என்றும் விவரித்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் யூத விரோத வன்முறை மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள் குறித்து மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள திருப்பீடம், யூத எதிர்ப்பைத் தடுக்கவும், யூத சமூகங்களை சிறப்பாகப் பாதுகாக்கவும், ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அவையின் (OSCE) உறுப்பு நாடுகளின் தொடர்ச்சியான முயற்சிகளை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருப்பீடத்தூதர் Luciano Suriani
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்